இலவசத்துக்கு நோ.. தனியாரிடம் மின்சாரம்! மத்தியஅரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவில் இருப்பது என்ன?
டெல்லி: கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
Recommended Video
நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வார விடுமுறைக்கு பிறகு இன்று நாடாளுமன்ற இரு அவைகளும் கூடும் நிலையில், லோக்சபாவில் மத்திய அரசு மின்சார சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்கிறது.
கடந்த புதன்கிழமை மத்திய அமைச்சரவை மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய நிலையில் இன்று, லோக்சபாவில் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இந்த மசோதாவை தாக்கல் செய்ய இருக்கிறார்.

மத்திய அரசின் கட்டுப்பாடு
தற்போது நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மின்சார வாரியங்களே வழங்கி வரும் சூழலில், இந்த மசோதா சட்டமானால் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் மின்சாரத்துறை செல்லும் சூழல் ஏற்படும் அளவுக்கு அதில் பல முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

மின் கட்டணம்
அதன்படி மின் விநியோகம் மற்றும் மின் கட்டணம் தொடர்பாக தேசிய மின்சார ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் மின் வாரியங்களால் நிர்ணயம் செய்யப்பட்டு வரும் மின் கட்டணங்களை இனி தேசிய மின்சார ஆணையமே நிர்ணயம் செய்யும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படுகிறது.

தனியார்மயம்
அதேபோல், மின்சார விநியோகத்தை தனியாருக்கு வழங்கவும் இந்த மசோதா வாய்ப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இந்த மசோதாவில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மின் கட்டணங்களை நிர்ணயம் செய்வது தொடர்பான விதிகள் இடம்பெற்று உள்ளன. மின்சார உற்பத்தி செலவுக்கு இணையாக மின் கட்டணம் இருந்தால் மட்டுமே மின் விநியோக நிறுவனங்களையும் சிறப்பாக நடத்த முடியும் என்று இதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மானியம், இலவசம்
மானியத்தை கருத்தில் கொள்ளாமல் மின் கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் இந்த மசோதா வலியுறுத்துகிறது. தற்போது தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், வீடுகளுக்கு முதல் 100 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுகிறது. இந்த சட்டம் மட்டும் அமலுக்கு வந்தால் இந்த இரண்டும் பறிபோகும் அபாயம் இருப்பதாக கூறி பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மின் பங்கீடு
அதேபோல் அணு மின் நிலையம், அனல் மின் நிலையங்கள், நிலக்கரி, காற்றாலை, நீர் மின் நிலையங்கள் மூலம் தமிழ்நாடு அதிகளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. 5 மாதங்கள் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதால் தமிழ்நாட்டில் மின்சாரம் மிகையாக இருக்கும் நிலையில், மாநிலங்களுக்கான மின் பங்கீட்டை பெற மாநில அரசின் ஒப்புதல் தேவையில்லை என்று இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருப்பது மாநில உரிமைகளுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications