திண்டுக்கல்லில் சிக்கிய அங்கித் திவாரி- கஸ்டடியில் எடுக்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு!
டெல்லி: திண்டுக்கல் அரசு மருத்துவரை மிரட்டி ரூ20 லட்சம் லஞ்சம் வாங்கி விட்டு தப்பி ஓடிய போது கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்துள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்பது 2018-ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு. இந்த வழக்கு அமலாக்கத்துறை வசம் இருப்பதாக கூறி ரூ51 லட்சம் லஞ்சம் கேட்டார் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி.

இதனையடுத்து டாக்டர் சுரேஷ் பாபுவிடம் முதலில் ரூ20 லட்சம் லஞ்சம் வாங்கினார் அங்கித் திவாரி. 2-வது தவணையாக மேலும் ரூ20 லட்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால் அங்கித் திவாரி காரில் ஏறி தப்பி ஓடினார். அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ20 லட்சம் லஞ்ச பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை அதிகாரி ரூ20 லட்சம் லஞ்சப் பணத்துடன் பிடிபட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது, மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். தாம் பெற்ற லஞ்ச பணத்தை அதிகாரிகளுக்கு பிரித்து கொடுத்ததாக அங்கித் திவாரி தகவல் தந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் காவலில் எடுத்தும் விசாரித்தனர். இதனையடுத்து மதுரை மத்திய சிறையில் தற்போது அங்கித் திவாரி அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் திண்டுக்கல் நீதிமன்றமோ, அமலாக்கத்துறை மனுவை டிஸ்மிஸ் செய்தது.
இதனால் அங்கித் திவாரியை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெறக் கூடும் என்கின்றன உச்சநீதிமன்ற வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications