ஜல்லிக்கட்டு நாயகன் பட்டம்..சிரித்த விஜயபாஸ்கர்..ஓடுன தண்ணீர்..ஓ.எஸ். மணியன் பதிலை கேட்டீங்களா
டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்பு ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்த அதிமுக அரசுக்கு கிடைத்த வெற்றி என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு நாயகன் என்று ஓ.பன்னீர் செல்வத்திற்கு பட்டம் கொடுத்தீர்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு சிரித்துக்கொண்டே பதில் கூறாமல் தவிர்த்து விட்டார் விஜயபாஸ்கர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கடந்த 2017ஆத் ஆண்டு ஜனவரி மாதம் மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். மதுரை, கோவை, நெல்லை என மாநிலத்தின் மிக முக்கிய நகரங்களில் போராட்டம் நடைபெற்றது. வாடிவாசல் திறக்காமல் வீடு வாசல் செல்ல மாட்டோம் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்து சட்டம் இயற்றினார். டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து அவசர சட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார். இதையடுத்து மிருகவதை தடுப்புச் சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் பல நகரங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றன. அதிமுகவினர் ஓ.பன்னீர் செல்வத்தை புகழ்ந்தனர்.
அடுத்த சில நாட்களில் சட்டசபையில் பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என புகழ்ந்தார் அப்போதைய அதிமுக எம்எல்ஏ தென்னரசு. இந்த புகழ்ச்சியே அவரது பதவிக்கு வேட்டு வைத்தது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு நடந்த சம்பவங்கள் நாடறியும். சசிகலா சிறைக்கு போகவே எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். சில மாதங்களுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்தனர்.

ஆட்சிகள் மாறின காட்சிகளும் மாறின. அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சினை உருவானது. எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர் செல்வம் இடையே விரிசல் உருவானது. அதிமுகவை விட்டு ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். இதனிடையே ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி கே .எம் .ஜோசப் தலைமையிலாயின ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது. வழக்கு விசாரணை நடைபெற்ற போது ஜல்லிக்கட்டு காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை எனவும் அனைத்து விதிமுறைகளும், சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது. இந்த சூழலில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜலிக்கட்டு போட்டியை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சிறப்பு சட்டங்கள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் திருப்தி அளிக்கிறது என்றும் ஜல்லிக்கட்டு, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அரசியல் சாசனம் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டத் திருத்ததை கொண்டு வந்த அதிமுக அரசுக்கு கிடைத்த வெற்றி இது. ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. இதை கொண்டாட அதிமுகவுக்கு உரிமை உள்ளது. இந்த தீர்ப்பு ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டினை எடுத்துள்ளது இந்த தீர்ப்பு மத்திய அரசுக்கு கிடைக்க வெற்றி என்றும் தெரிவித்தார். அப்போது செய்தியாளர்கள், ஜல்லிக்கட்டு நாயகன் என்று நீங்களே அவரை புகழ்துள்ளீர்கள். ஓ.பன்னீர் செல்வத்திற்கு இதற்கான கிரெடிட் இருக்கா இல்லையா என்று கேட்டனர். அதைக்கேட்டு விஜயபாஸ்கர் சிரித்தார். அப்போது பக்கத்தில் இருந்த ஓ.எஸ்.மணியன், தம்பி ஓடுன தண்ணீர் கடல்ல போய் கலந்துடும் என்று சொன்னார். திரும்ப திரும்ப நீங்க அதை கேட்கக்கூடாது என்று சொல்ல அதற்கும் விஜயபாஸ்கர் சிரித்தார். இது ஒரு மகிழ்ச்சியான நேரம் என்று கூறி சமாளித்தார்.












Click it and Unblock the Notifications