மூன்றாம் உலகப்போர் நெருங்கிவிட்டது.. இந்தியாவால்தான் உலகை காப்பாற்ற முடியும்! நிபுணர்கள் வார்னிங்
டெல்லி: மூன்றாம் உலகப்போர் எதிர்பார்க்கும் தொலைவில்தான் இருக்கிறது என்றும், இந்தியாவால்தான் இதை தடுக்க முடியும் எனவும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
பெங்களூரை சேர்ந்த சினர்ஜியா ஃபவுண்டேசன் எனும் நிறுவனம் சமீபத்தில் 'உலகத்தின் எதிர்காலம் 2035' என்கிற பெயரில் அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையை முன்வைத்து நிபுணர்கள் விவாதங்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விவாதத்தில் முன்னாள் தேசிய ஆலோசகர் எம்.கே.நாராயணன் பங்கேற்றிருந்தார். அவர் கூறிய கருத்துக்கள் கவனம் பெற்றிருக்கின்றன. அவர் பேசியதாவது, "மூன்றாம் உலகப்போருக்கான காலம் வெகு தொலைவில் இல்லை. நெருக்கத்தில் இருக்கிறது. ராணுவத்தில் தொழில்நுட்பம் உச்சத்தை தொட்டிருப்பதும், சைபர் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதும், பரஸ்பர புரிதல் குறைந்திருப்பதும் மூன்றாம் உலகப்போருக்கான காரணங்களாக இருக்கின்றன" என்று கூறியிருக்கிறார்.
பரஸ்பர புரிதல் குறைவு என்பதற்கு சமீபத்திய உதாரணம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவும்-சீனாவும் மோதிக்கொண்ட சம்பவம்தான். காலங்காலமாக இந்த எல்லை பகுதியில் இரு நாடுகளும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன. ஆனால், சமீப காலமாக இரு நாட்டு வீரர்களிடையேயும் மோதலுக்கான தீ எரிந்துக்கொண்டிருந்தது. 2020ம் ஆண்டு ஜூன் மாதம் திடீரென எதிர்பாராத விதமாக மோதல் வெடித்தது.
மூன்றாம் உலகப்போர் குறித்து தொடர்ந்து பேசிய நாராயணன், "உலக நாடுகள் பிளவுப்பட்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் அணிசேரா கொள்கையை நாம் மீண்டும் நம்பிக்கைக்குரிய அமைப்பாக மீட்டெடுக்க வேண்டும்" என்றும் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவும், சோவியத் ரஷ்யாவும் பலமாக இருந்த காலத்தில் இந்தியா மற்றும் அதன் பக்கத்து நாடுகள் சில, அணிசேரா கொள்கைகளை பின்பற்றின. அதாவது எந்த நாட்டின் கொள்கையையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் இதன் அர்த்தம். எனவே இந்தியா சுதந்திரமான சில முடிவுகளை எடுத்திருந்தது. மட்டுமல்லாது, ரஷ்யாவுடன் சேர்வதால் அமெரிக்கா போடும் பொருளாதார தடைகளும், அமெரிக்காவுடன் சேர்வதால் அதன் சுயநலத்திற்கு பலியாவதில் இருந்தும் இந்தியா தப்பித்து வந்தது.
அதேபோல இந்த விவாதத்தில் பங்கேற்றிருந்த முன்னாள் வெளியுறவு செயலாளர் கன்வால் சிபல், "ஒரு காலத்தில் ராஜதந்திரம் என்பது மிகுந்த பயனுள்ள ஒன்றாக இருந்தது. பேச்சுவார்த்தை மற்றும் சமரசம்தான் ராஜதந்திரமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த இரண்டிலிருந்தும் ராஜதந்திரம் தன்னை விடுவித்துக்கொண்டிருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
இந்த விவாதங்களில் முக்கியமான விஷயம் மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, எதிர்காலத்தில் மூன்றாம் உலகப்போர் தொடங்குகிறது எனில் அதை தடுப்பதில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதுதான் அது.












Click it and Unblock the Notifications