Exclusive:2024 தேர்தல்ல பாஜகவை "வழியனுப்பிட்டு" நாங்க வீடு திரும்ப தயார்..தமிழகத்து பஞ்சாப் விவசாயி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நாங்கள் வீடு திரும்பவும் தயாராக உள்ளதாக தமிழகத்து பஞ்சாப் விவசாயி கோல்டன் தெரிவித்துள்ளார்.

கடந்த 9 மாதங்களாக வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் அமைப்பை சேர்ந்த பஞ்சாப் கோல்டன் நமக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கோயமுத்தூர்காரர் என்பதால் தமிழ் பேசுவார்.

இவர் நமது ஒன் இந்தியா தமிழ் தளத்திற்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்:

கே: இத்தனை அழகாக கொங்கு தமிழ் பேசுகிறீர்கள் அது எப்படி, உங்களுக்கு தமிழின் மீது எப்படி ஆர்வம் ஏற்பட்டது

ப: எனது தந்தை கோயமுத்தூரில் லாரி உரிமையாளராக இருந்தார். நான் அங்குதான் படித்தேன். 3ஆவது மொழிப்பாடமாக தமிழை எடுத்து படித்துள்ளேன். 1998 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்திற்கு வந்து விவசாயம் செய்து வருகிறோம். 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் மக்களுடன் இணைந்து பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மோடி அரசுக்கு எதிராக எனது பிரச்சார வீடியோ வைரலானது. தமிழக சட்டசபை தேர்தலிலும் வானதி ஸ்ரீனிவாசன், எச் ராஜா, அண்ணாமலை, குஷ்பு உள்ளிட்டோருக்கு எதிராக தமிழகம் வந்து பிரச்சாரம் செய்தேன். தமிழகத்து விவசாயிகளுக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன், தூத்துக்குடி ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்ததை கண்கூடவே பார்த்தோம்.

Exclusive: Punjab tamil speaking farmer Golden says about delhi protest

கே: தமிழகத்தில் வேளாண் பட்ஜெட் குறித்து உங்கள் கருத்து என்ன

ப: தமிழகத்தில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புகளை வரவேற்கிறோம். பட்ஜெட் தாக்கலின் போது அதை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக அர்ப்பணித்த அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மை என்பது நல்ல திட்டம். தற்போதைய தேவையும் கூட. பயிர்களுக்கு மருந்து தெளிப்பதால் மக்களுக்கு நிறைய நோய்கள் ஏற்படுகின்றன. புதிய புதிய நோய்கள் வராமல் தடுக்க ஆர்கானிக் பார்மிங்தான் நல்லது. விளைச்சல் அதிகம் கிடைக்க இது போல் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது பேராசை. 2 ஆண்டுகளுக்கு சாகுபடி குறைச்சலாகத்தான் வரும். அதன்படி நாம் பயன்படுத்திய இயற்கை உரம் மண்ணை வளமாக்கும். பின்னர் சாகுபடி கூடும்.

தமிழகத்தில் இயற்கை விவசாயத்திற்கு குழு அமைக்கவுள்ளார்கள். அந்த குழுவினர் இந்த இயற்கை விவசாயம் குறித்து ஒவ்வொரு ஊரிலும் விவசாயிகளிடம் எடுத்து சொன்னால் அவர்களும் இயற்கை விவசாயத்திற்கு மாறுவர். பம்பு செட்டுகளை வழங்க ரூ 4500 கோடி ஒதுக்குவதாக சொல்லியிருக்கிறார்கள். இலவச மின்சாரம் கொடுத்தது கலைஞர்தான். 114 கோடி சோலார் ஆலைகளுக்கு ஒதுக்கியுள்ளார்கள். நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் ரூ.50 லட்சம் செலவில் மிளகிற்கான பதப்படுத்தும் மையம் அமைப்பது நல்ல திட்டம். நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் குறித்து அறிவித்தது மகிழ்ச்சி.
"நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,500 வரை உயர்த்தி வழங்கப்படும் . கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.3,500 ஆக உயர்த்தப்படும்" என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தார்கள். அதை பட்ஜெட்டில் நிறைவேற்றாதது விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கிறது.

கே: இந்தியா முழுவதும் வேளாண் பட்ஜெட்டை அந்தந்த மாநில அரசுகள் தாக்கல் செய்தால் உங்கள் கோரிக்கைகளுக்காக மத்திய அரசை நாட வேண்டிய அவசியம் இருக்காதா

ப: எல்லாவற்றையும் சொல்ல முடியாது. குறைந்தபட்ச ஆதார விலையை மாநில அரசுகளுக்கு கொடுக்கலாம். கேரளாவில் 14 பயிர்களுக்கு மாநில அரசே குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கிறார்கள். 3 வேளாண் சட்டங்களும் மாநில அரசின் கீழ் இருக்கும் போது அதில் மத்திய அரசு தலையிடவே கூடாது. மாநில அரசுகளே சட்டங்களை இயற்றினால் மத்திய அரசு புதிய சட்டங்களை கொண்டு வர யோசிக்கும்.

கே: 8 மாதங்களாகிவிட்டது, இன்னமும் உங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் என நம்புகிறீர்களா

ப: நிச்சயமாக! நாங்கள் போராட்டம் தொடங்கி 9 மாதங்களாகிவிட்டன. 263 நாட்கள் ஆகிறது. 600 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துவிட்டார்கள். எனினும் மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாததற்கு ஈகோ பிரச்சினைதான் காரணம். மத்திய அரசுக்கு போட்டியாக நாங்கள் நாடாளுமன்றம் நடத்தினோம். பெண்கள் தனி நாடாளுமன்றம், ஆண்கள் தனியாக நடத்தினோம். உலகளவில் எங்களது நாடாளுமன்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இதெல்லாம் மத்திய அரசுக்கு பின்னடைவுதான். இருந்தாலும் நாங்கள் தோற்றுவிட்டோம் என கூறிவிட்டு வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கு பதிலாக காலம் தாழ்த்தி வருகிறார்கள். இதை எப்படி ரத்து செய்வது என்பது குறித்து ஆலோசனையும் நடத்தியுள்ளார்கள். விவசாயிகள் நடத்திய நாடாளுமன்றத்தில் என்னென்ன மசோதாக்களை தாக்கல் செய்தோம் என்பது குறித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளோம். எனவே குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தை வைத்து வேளாண் சட்டங்களை ரத்து செய்யலாம்.

கே: போராட தொடங்கிய போது இருந்த அதே எண்ணிக்கையிலான விவசாயிகள் இப்போதும் போராடுகிறார்களா , இல்லை அவர்கள் வீடு திரும்பிவிட்டனரா

ப: போராட்டம் தொடங்கிய போது 5 லட்சம் விவசாயிகள் இருந்தனர். 8 லட்சம் டிராக்டர்கள் இருந்தன. இப்போது எண்ணிக்கையானது குறைந்துவிட்டது. நாங்கள் எல்லாம் அங்குதான் இருக்கிறோம். ஹரியானா விவசாயிகள் பகல் ஷிப்ட், இரவு ஷிப்ட் என வைத்து அதற்கேற்ப போராட்ட களத்திற்கு வருகிறார்கள். பஞ்சாப் விவசாயிகளில் ஒரு பிரிவினர் 10 நாட்களுக்கு ஒரு முறை வருவார்கள், இன்னொரு குரூப் வீட்டுக்கு செல்லும். இன்னொரு விஷயம் ஆட்கள் இருக்கிறார்களா இல்லையா என்று பிரச்சினை இல்லை, காலியாக உள்ள டெண்ட்டுகளை கூட மோடி அரசால் எதையும் செய்ய முடியாது. எங்களை விரட்டவும் முடியாது. மீறி ஏதாவது மத்திய அரசு செய்தால் லட்சக்கணக்கான விவசாயிகளை 2 மணி நேரத்தில் கொண்டு வருவோம் என ஹரியானா விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அது போல் பஞ்சாப் விவசாயிகள் 4 மணி நேரத்தில் பெருந்திரளாக திரண்டு விடுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். எனவே எங்களை விரட்டவே முடியாது.

Exclusive: Punjab tamil speaking farmer Golden says about delhi protest

கே: விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என காந்தியடிகள் சொல்லியுள்ளார்கள். அப்படியிருக்கும் போது உங்கள் பிரச்சினைகளை ஏன் அரசாங்கம் கேட்கவில்லை

ப: காந்தி சொன்னார் என்பதெல்லாம் இல்லை. கார்பரேட்டுக்கு விளை போய்விட்டார்கள். தேர்தலுக்கு மோடி பிரதமராக செலவு செய்ததே கார்பரேட்டுகள்தான். எனவே அவர்கள் செலவு செய்ததை திருப்பி கேக்கத்தான் செய்வாங்க. ரயில்வே, துறைமுகம் உள்ளிட்டவற்றை தனியாருக்கு தாரைவார்த்தாகிவிட்டது.

கே: நாட்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது. அடுத்த கட்டமாக என்ன செய்வதாக உத்தேசம்

ப: விவசாயிகளின் பலம் அதிகரிக்கும் நாட்கள் கூடி கொண்டே போகிறது, மோடி அரசின் செல்வாக்கு குறைந்து கொண்டே போகிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில தேர்தலில் பாஜக தோற்கும் அளவுக்கு நாங்கள் பிரச்சாரம் செய்வோம்.

கே: போராடும் விவசாயிகள் சமூகவிரோதிகள் என சில அரசியல்வாதிகளும் பிரமுகர்களும் கூறியது குறித்து உங்கள் கருத்து என்ன

ப: ஏதோ ஒரு நாள் போராட்டம் என்றால் காசு கொடுத்து ஆட்களை கூட்டி வரலாம். ஆனால் நாங்கள் 9 மாதங்களாக போராடி வருகிறோம். எப்படி காசு கொடுத்து ஆட்களை திரட்ட முடியும்? காசு கொடுத்து ஆட்களை கூட்டி செல்வதெல்லாம் பாஜகவினரின் வேலை. மேற்கு வங்கத்திற்கு ரயிலில் ஆட்களை அழைத்து சென்றார்கள். மக்களை திசைதிருப்பவே எங்கள் மீது தவறான கருத்துகளை சொல்கிறார்கள்.

கே: கொரோனா பரவலில் இருந்து எப்படி உங்களை தற்காத்துக் கொண்டீர்கள்

ப: கொரோனா உச்சத்தில் இருந்த போதுகூட மாஸ்க்கோ, தடுப்பூசியோ போட்டுக் கொள்ளவில்லை. எங்களுக்கு தடுப்பூசி போட நிறைய குழுவினர் வந்தனர். நாங்கள் போட்டுக் கொள்ளவில்லை. எங்களுக்கு ஏதாவது உடம்புக்கு வந்தால் எங்களுக்காக இருக்கும் மருத்துவக் குழுவினர் பார்த்துக் கொள்வார்கள் என கூறி அவர்களை அனுப்பிவிட்டோம். எங்கள் விவசாயிகள் கொரோனாவால் ஒருவரும் பாதிக்கப்படவில்லை, ஒருவரும் இறக்கவில்லை. நாங்கள் கூட்டம் கூட்டமாகத்தான் பயணிக்கிறோம்.

கே: உங்கள் கோரிக்கைகள் எப்போது நிறைவேறும்? மத்திய அரசுக்கு நீங்கள் சொல்வது என்ன?

ப: போராட்டம் தொடங்கிய போது 6 மாதங்களுக்கான உணவு பொருட்களுடன் வந்தோம். தற்போது ஓராண்டுக்குத் தேவையான உணவு பொருட்கள் கைவசம் வைத்துள்ளோம். இன்னும் தேவையென்றாலும் சொல்லி அனுப்பினால் வரும். எங்கள் கோரிக்கைகளை இன்று நிறைவேற்றினால் நாளையே நாங்கள் செல்ல தயார். இல்லை பாஜக அரசை 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வீட்டுக்கு அனுப்பிவிட்டுத்தான் நாங்கள் வீடு திரும்ப வேண்டும் என்றாலும் அதற்கு நாங்கள் தயார் என்றார் கோல்டன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+