"பயங்கர சத்தம்!" அதுவும் பிரதமர் பேரணி நடக்கும் இடத்தில் இருந்து.. சில கிமீ தொலைவில்! பரபர காஷ்மீர்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் செல்ல உள்ள நிலையில், அங்குப் பயங்கர சத்தத்துடன் எதோ ஒன்று வெடித்துச் சிதறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை வழக்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்தது. காஷ்மீரும் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
மாநில அரசு இல்லாத நிலையில், ஆளுநரே அங்கு அரசியல் ரீதியாக அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து வந்தார். 2 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு அரசியல் நடவடிக்கைகளும் இல்லை.

காஷ்மீர்
இடையில் காஷ்மீர் தேர்தல் குறித்து பேச்சுகள் எழுந்தன. இதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட நடைபெற்றது. இதில் காஷ்மீரின் 14 முக்கிய அரசியல் கட்சிகள் கலந்து கொண்டனர். காஷ்மீர் குறித்தும் காஷ்மீர் டிலிமிடெஷன் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இருப்பினும், அந்தக் கூட்டத்திற்குப் பின் முக்கிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

பிரதமர் மோடி
இதற்கிடையே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்குப் பின்னர், பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் முறையாகக் காஷ்மீர் செல்கிறார், 2019 ஆகஸ்ட் மாதம் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிரதமர் மோடி அங்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். இதையடுத்து அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுவாகவே காஷ்மீரில் அதிகளவில் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் சூழலில், பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பயங்கர சத்தம்
ஜம்மு அருகே சம்பாவில் நடைபெறும் மாபெரும் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நடைபெறும் பேரணியில் ஆயிரக்கணக்கான பஞ்சாயத்து உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடியின் பேரணி நடைபெறும் இடத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள வயல்வெளியில் பயங்கர சத்தத்துடன் எதோ ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.

என்னாச்சு
ஜம்மு மாவட்டத்தில் உள்ள லலியானா கிராமத்தில் இது ஏற்பட்டது. இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையை வைத்துப் பார்க்கும் போது, இது பயங்கரவாத தாக்குதல் போலத் தெரியவில்லை என்றும் எதிர்பாராத வகையில் நடந்த விபத்தாகவே தெரிவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

வளர்ச்சி பணிகள்
இருப்பினும், போலீசார் தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு சுமார் 2.5 ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் காஷ்மீர் செல்லும் நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய தினம் ஜம்மு காஷ்மீரில் பனிஹால்-காசிகுண்ட் சாலை சுரங்கப்பாதை, டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா எக்ஸ்பிரஸ்வே என மொத்தம் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.












Click it and Unblock the Notifications