மிரண்டது பாகிஸ்தான்! அதிகாலையில் அலற விட்ட குண்டு சத்தம்.. குறி வைத்து அடித்த இந்தியா!
டெல்லி: பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் இருக்கும் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலையில் பல்வேறு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்தியா பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், பாகிஸ்தான் வான் வெளியை முடக்கியுள்ளது.
சனிக்கிழமை அதிகாலையில் பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு விமானப்படைத் தளங்களில் பல குண்டுவெடிப்புகள் பதிவாகி உள்ளன. ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம், பஞ்சாபின் ஷோர்கோட்டில் உள்ள ரஃபிகி விமானப்படை தளம் மற்றும் பஞ்சாபின் சக்வாலில் உள்ள முரித் விமானப்படை தளம் ஆகிய மூன்று விமானப்படை தளங்களும் இந்த தாக்குதல்களில் குறி வைக்கப்பட்டுள்ளன.

வடமேற்கு பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தில் பலமுறை குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் உள்ளூர் ஆதாரங்களின் அடிப்படையில் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அஹ்மத் ஷெரீப், தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் தளம், சக்வாலில் உள்ள முரித் தளம் மற்றும் பஞ்சாப் மாகாணத்தின் ஜாங் மாவட்டத்தில் உள்ள ரஃபிகி தளம் ஆகிய மூன்று முக்கிய விமானத் தளங்கள் மீது இந்தியா பல ஏவுகணைகளை ஏவியதாகக் கூறினார்.
மே 10 ஆம் தேதி அதிகாலை 3:15 மணி முதல் மதியம் 12 மணி வரை பாகிஸ்தான் வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளது. மே 10 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:15 மணி முதல் மதியம் 12:00 மணி வரை அனைத்து வகையான விமானங்களுக்கும் பாகிஸ்தானின் வான்வெளி மூடப்பட்டிருக்கும் என்று பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
எனினும், ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து இந்திய ராணுவ தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் இதுவரை வரவில்லை. கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நகரங்களை குறிவைத்து எல்லை தாண்டி ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வந்தது. பாகிஸ்தான் வான் ஊடுருவல்களை மேற்கொள்ள பொதுமக்கள் விமானங்களை கேடயமாகப் பயன்படுத்தியது. இருப்பினும், இந்திய பாதுகாப்பு அமைப்புகள் அனைத்து பாகிஸ்தான் ட்ரோன்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு அழித்தன.
வெள்ளிக்கிழமை இரவு, வடக்கில் பாரமுல்லா முதல் தெற்கில் பூஜ் வரை, சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) ஆகிய இரு இடங்களிலும் 26 இடங்களில் பாகிஸ்தானிய ட்ரோன்கள் காணப்பட்டன. பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் குடியிருப்பு பகுதியை குறிவைத்து பாகிஸ்தானிய ட்ரோன் ஒன்று தாக்குதல் நடத்தியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பகுதியில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதைத் தொடர்ந்து முழுமையான மின் தடை விதிக்கப்பட்டது. சனிக்கிழமை பஞ்சாபின் ஜலந்தரில் சில ட்ரோன்கள் காணப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து ஜலந்தரிலும் மின்தடை விதிக்கப்பட்டது. சைரன்கள் ஒலிக்கப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications