5 மாநில தேர்தல்- விவசாயிகள் விஸ்வரூபம்: செம்ம அடி வாங்கப் போவது ராஜஸ்தான் காங், ம.பி பாஜக அரசுகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் முடிவுகளை தீர்மானிக்க கூடியவர்கள் விவசாயிகள் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றனர்.

லோக்சபா தேர்தலுக்கு முந்தைய செமி பைனல் தேர்தலாக பார்க்கப்படுகிறது ராஜஸ்தான், சத்தீஸ்கர், ம.பி. தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள். நவம்பர் 7-ந் தேதி தொடங்கி நவம்பர் 30-ந் தேதி வரை வாக்குப் பதிவும் டிசம்பர் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். 5 மாநில தேர்தலைத் தொடர்ந்து அடுத்த சில மாதங்களிலேயே லோக்சபா தேர்தல் பணிகள் மும்முரமாகிவிடும்.

Farmer Votes to be decide Five State Election Results

தற்போதைய 5 மாநில தேர்தல்களில் மாநிலம் சார்ந்த பிரச்சனைகளைத் தாண்டி ஒவ்வொரு அரசியல் கட்சியும் அள்ளிவிடும் தேர்தல் வாக்குறுதிகள் பிரதான இடம் பிடிக்கின்றன. தெலுங்கானாவில் காங்கிரஸ் எங்கே இருக்கிறது? என காங்கிரஸ் கட்சியினரே தேடிக் கொண்டிருந்த நிலையில் சோனியா காந்தி வெளியிட்ட அதிரடி தேர்தல் வாக்குறுதிகள் ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் களநிலவரத்தையே மாற்றிவிட்டன. தமிழ்நாடு, கர்நாடகா மாநில தேர்தல்கள் இதற்கு முன்னோடி என்பதால் வட இந்தியாவிலும் இந்த பார்முலா பின்பற்றப்பட்டு வருகிறது.

இவை ஒருபுறமிருக்க ராஜஸ்தான், சத்தீஸ்கர், ம.பி. தெலுங்கானா மாநில தேர்தல்களில் எல்லாவற்றையும் கண்டும் காணாமல் 'மவுனமாக' கடந்து போகும் விவசாயிகள் என்ன முடிவு எடுப்பார்கள்? என்பதை அம்மாநில களநிலவரங்களே வெளிப்படுத்துகின்றன.

ராஜஸ்தான்: ராஜஸ்தான் பல்வேறு வேளாண் துறைகளில் மிகப் பெரும் வளர்ச்சியை கண்டிருக்கிறது. நாட்டின் கடுகு, பார்லி உற்பத்தியில் முதலிடம் நிலக்கடலை உற்பத்தியில் 2-வது இடத்தில் உள்ளது. சோயாபீன், பருத்தி, வெங்காயம், கோதுமை உற்பத்தியில் முதல் 5 இடங்களில் உள்ளது ராஜஸ்தான். இதற்கு அப்பால் பால் உற்பத்தியில் நாட்டின் முன்னணி மாநிலமாகவும் உருவெத்துள்ளது. இருந்த போதும் அண்மைக் காலமாக பருத்தி உற்பத்தியை நிர்மூலமாக்கக் கூடிய பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு எதுவுமே செய்யவில்லை என்கிற வேதனை இத்தனை லட்சம் பருத்தி விவசாயிகளின் மனதில் பெரும் வடுவாக இருக்கிறது. இது நிச்சயம் தேர்தலில் காங்கிரஸுக்கு பாதகமான ஒன்றாக இருக்கும் என்கின்றனர் அம்மாநில அரசியல் பார்வையாளர்கள்.

ம.பி: மத்திய பிரதேச மாநில சோயாபீன்ஸ் விவசாயிகளின் வேதனை சொல்லி மாளாதது என்கின்றனர். இந்த மாநிலத்தில் தற்போது சோயாபீன் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,500 ஆக உள்ளது. கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் ரூ.4,800 ஆகவும், 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6,000 ஆகவும் இருந்தது. இந்த விலை குறைப்புக்கு எத்தனையோ காரணங்களை ஆளும் பாஜக அரசு சொல்லிவிடலாம்.. ஆனால் ரூ6,000 பெற்று வந்த விவசாயிகள் ரூ4,500 பெறும் போது ஏற்படுகிற கோபம் வாக்குச் சீட்டில் இடம் பெறாமலா போகும் என்கின்றனர். இது ஆளும் பாஜக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் நாட்டின் நெல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள 10 மாநிலங்களில் ஒன்று. நெல் கொள்முதலில் 3-வது இடத்தில் உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு நடவடிக்கையால் மாநில விவசாயிகள் நெல்லுக்கான அதிக விலையைப் பெறுகின்றனர். நெல்லுக்கு ஒரு குவிண்டால் விலையாக ரூ. 2,640 மற்றும் 'ஏ' தர நெல்லுக்கு ரூ. 2,660 வழங்கப்பட்டது. மொத்தம் 23.4 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 10.75 மில்லியன் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, கிட்டத்தட்ட ரூ.28,500 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் நெல் கொள்முதலில் குவிண்டாலுக்கு ரூ.3,600 வழங்கப்படும் என முதல்வர் பூபேஷ் பாகல் அறிவித்துள்ளது தேர்தலில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமாம்.

தெலுங்கானா: தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் அரசு விவசாயிகள் பிரச்சனையை மிகவும் கவனமாகவே கையான்டிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 2018-ல் தொடங்கப்பட்ட ரிதுபந்து திட்டம்- விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ4,000 முதல் ரூ5,000 வரை வழங்கும் இத்திட்டம் தங்களுக்கு பெரிதும் கை கொடுக்கப் போகிறது என்பது பிஆர்எஸ் நம்பிக்கை. தெலுங்கானாவில் 65 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.72,815 கோடி வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவின் மொத்த சாகுபடி பரப்பளவு 131 லட்சத்தில் இருந்து 238 லட்சம் ஏக்கராகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த பாசனப் பரப்பு 62.5 லட்சத்தில் இருந்து 135 இலட்சம் ஏக்கராக இருமடங்காக அதிகரித்துள்ளது. இதற்காக பல நீர்ப்பாசனத்திட்டங்களையும் பிஆர்எஸ் அரசு செயல்படுத்தியது. மாநிலத்தின் நெல் கொள்முதல் 6 மடங்கு அதிகரித்திருக்கிறது. 2014-15ல் 4.4 மில்லியன் டன்னாக இருந்த மாநிலத்தின் நெல் உற்பத்தியை 2022-23ல் 17.5 மெட்ரிக் டன்னாக உயர்த்தி சாதனை படைத்துள்ளது. இதேபோல பருத்தி, மிளகாய், மஞ்சள், முட்டை உற்பத்தியிலும் பிரம்மாண்ட சாதனை படைத்திருக்கிறது தெலுங்கானா. என்னதான் பிஆர்எஸ் ஆட்சி இத்தனை சாதனைகளை படைத்திருந்தாலும் அடுத்து வரும் அரசு இதனைவிட கூடுதலாக செய்வோம் என வாக்குறுதி தரும் போது.. நிலைமை மாறுமோ? என்பதையே தெலுங்கானா தேர்தல் வாக்குறுதிகள் வெளிப்படுத்துகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+