டெல்லி சலோ.. பஞ்சாப் விவசாயிகள் படையெடுப்பு- எல்லையில் ஆணிகளுடன் கான்கிரீட் தடுப்புகள்- ’நெட்’ கட்!
டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் 20,000 விவசாயிகள் டெல்லியை நாளை மறுநாள் முற்றுகையிட உள்ளனர். இதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி டிராக்டர்களில் புறப்பட்டனர். டெல்லி எல்லையில் 144 தடை உத்தரவுடன் கான்கிரீட் தடுப்புகள், ஆணி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடிய வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிராக தலைநகர் டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஓராண்டு காலம் போராட்டம் நடத்தினர். டெல்லி எல்லைகளிலேயே முகாமிட்டு கடும் குளிரிலும் வெயிலும் உறைபனியிலும் போராட்டம் நடந்தது. இதனால் மத்திய பாஜக அரசு பணிந்து 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றது. இந்தப் போராட்டங்களில் 800 விவசாயிகள் உயிரிழந்தனர். இப்போராட்டங்களை திரும்பப் பெறும் போது மத்திய அரசு தரப்பில் விவசாயிகளுக்கு ஏராளமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

ஆனால் தங்களுக்கு மத்திய பாஜக அரசு கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற்றப்படவில்லை என்பது விவசாயிகளின் கோபம். இதற்காக தலைநகர் டெல்லியில் நாளை மறுநாள் 13-ந் தேதி பிரம்மாண்ட போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் 20,000 விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட் மாநில விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டர்களில் புறப்பட்டுள்ளனர். இந்த விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க டெல்லியின் திக்ரி எல்லை உள்ளிட இடங்களில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லி எல்லைகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் முழுமையாக இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதை ஒடுக்க மத்திய அரசு தயாராகிவிட்டது.
அதே நேரத்தில் டெல்லி எல்லையில் குவிந்து வரும் விவசாயிகளைத் தடுக்க மத்திய அரசு நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மத்திய அமைச்சர்கள் குழு நாளை சண்டிகரில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. அதே நேரத்தில் திட்டமிட்டபடி தடைகளை உடைத்து டெல்லிக்குள் நுழையவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளதால் எல்லைகளில் பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications