மத்திய இடைக்கால பட்ஜெட் 2024: தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. அதிரடி அறிவிப்புகள்!
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
எதிர்வரும் லோக்சபா தேர்தல் பாஜகவுக்கு முக்கியமானதாகும். ஏற்கெனவே இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த முறையும் வெற்றி பெற்று தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நேருவுக்கு பிறகு மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக வெற்றி பெற்று பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையை மோடி பெறுவார்.

அதேபோல சர்வதேச பொருளாதாரத்தில் உலகின் பல பலமான நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்த சூழலை தனது தேர்தல் மைலேஜுக்காக பாஜக பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது. எனவே இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது. குறிப்பாக இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்திற்கு உயர்த்துவது தொடர்பான அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புடன் விவசாயத்தில் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான ஊக்குவிப்புகளை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம் என சொல்லப்பட்டது. டிஜிட்டல் துறைகள் மட்டுமல்லாது சாலை, ரயில் பாதைகள், பாலங்கள் என உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என கூறப்பட்டது. இந்த உள்கட்டமைப்பு துறையில் பொது-தனியார் கூட்டாண்மை (பிபிபி) முதலீடுகளை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இது தவிர வேறு சில முக்கிய அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்றாலும், தேர்தல் காரணமாக மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பிரதம மந்திரியின் கிசான் திட்டத்திற்கான நிதியை அதிகரிப்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறியிருந்தனர். இவை வேலை வாய்ப்புகளுடன் தொடர்புடையதாகும். சமீப நாட்களாக வேலையின்மை பிரச்னை பெரியதாக வெடித்திருக்கிறது. இதனை சமாளிக்க அறிவிப்புகள் வெளியாகலாம் என்று அவர்கள் கணித்திருந்தனர்.
இன்று காலை 11 மணியளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மே அல்லது ஜூன் மாதம் புதிய அரசு அமைந்த பின்னர் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.












Click it and Unblock the Notifications