இந்தியாவில் அமலானது சிஏஏ.. 14 பேருக்கு கொடுத்தாச்சு குடியுரிமை! எதிர்ப்புக்கு இடையே மத்திய அரசு ஆணை
டெல்லி: கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிக்கை வந்தது. இந்நிலையில் தான் 2 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக 14 பேருக்கு சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மையினராக இந்துக்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், ஜெயின் உள்ளிட்ட பிற மதங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். இவர்கள் அந்த நாட்டில் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் தான் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக இருப்போருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக மத்திய அரசு சார்பில் சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வருவதில் முனைப்பு காட்டியது. மேலும் இந்திய குடியுரிமை சட்டம் 1955ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு இந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இரு சபைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. பிறகு ஜனாதிபதி ஒப்புதல் பெற்றப்பட்டது. இந்த சிஏஏ சட்டம் கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.
இந்த குடியரிமை திருத்தம் சட்டம் என்து பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சம் அடைபவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகுக்கிறது. அதன்படி அந்த 3 நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர், ஜைனர்கள், பார்சி, கிறிஸ்தவ மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்ட திருத்தம் வழிவகை செய்யும்.
இவர்கள் இந்தியா வந்த பிறகு 6 ஆண்டுகளில் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்ய முடியும். மேலும் 2014 டிசம்பருக்கு முன்பாக இந்தியாவில் குடியேறியவர்கள் விண்ணப்பம் செய்து இந்திய குடியுரிமை பெறலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 3 நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியவர்கள் மத்திய அரசிடம் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.
அதில் முதற்கட்டமாக குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவுக்கு குடிபெயர்ந்த சீக்கியர்கள், ஹிந்துக்கள் என 14 பேருக்கான குடியுரிமை ஆணையை மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா வழங்கினார்.
இந்தியாவை பொறுத்தவரை சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்துள்ளனர். தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என கூறி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சிஏஏ மூலம் முஸ்லிம்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பது தான். ஆனால் மத்திய அரசு முஸ்லிம்கள் மற்றும் இலங்கை தமிழர்களை குடியுரிமை திருத்த சட்டத்தில் இணைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications