5 மாநில தேர்தல்கள்: தமிழகம் போல காங். இருக்கும் அணியில் சிபிஎம் இணைய முடிவு!
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் தமிழகத்தைப் போல காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில் சிபிஎம் இணைய அக்கட்சியின் மத்திய குழுவான பொலிட்பீரோ ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆனால் நேரடியாக காங்கிரஸுடன் கூட்டணி வைத்து கொள்வதற்கு பொலிட்பீரோ ஒப்புதல் தரவில்லை.
உ.பி, உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன.

சிதறி நிற்கும் எதிர்க்கட்சிகள்
இந்த மாநிலங்களில் பாஜக வெல்லக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து எதிர்க்கட்சிகளும் தனித்தனியே நிற்கின்றன. இதனால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் இயல்பாகவே சிதறுவதும் பாஜக அதனால் ஆதாயம் அடைவதும் நடந்துவிடும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

பாஜகவுக்கு சாதகம்
மேலும் கருத்து கணிப்புகளும் உத்தரகாண்ட், பஞ்சாப் தவிர இதர 3 மாநிலங்களில் பாஜகவுக்கே சாதகமாக இருக்கும் என்கின்றன. அதேநேரத்தில் கடந்த 2017-ம் ஆண்டைப் போல பிரமாண்ட வெற்றியை பாஜகவால் வெல்ல முடியாது; கடந்த தேர்தலைவிட கணிசமான தொகுதிகளில்தான் இம்முறை பாஜக வெல்ல முடியும் என்கின்றன கருத்து கணிப்புகள்.

இடதுசாரிகளும் காங்கிரஸும்
இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் எந்த அணியில் இடம்பெறுவது என்பது தொடர்பாக அந்தந்த மாநில குழுக்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் சிபிஎம் கட்சியின் மத்திய குழு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்து இருவிதமான நிலைப்பாடுகளை மத்திய குழு எடுத்துள்ளது. ஒன்று, காங்கிரஸ் கட்சியுடன் நேரடியாக கூட்டணி வைத்து கொள்வது இல்லை என்பது பொலிட்பீரோவின் தீர்மானம். மற்றொன்று, தமிழ்நாட்டில் திமுக அணியில் காங். இடம்பெற்றுள்ளது; அதே அணியில் இடதுசாரிகளும் இடம்பெற்றிருக்கின்றன. இத்தகைய ஒரு கூட்டணியில் இடதுசாரிகள் மேற்கண்ட 5 மாநில தேர்தல்களின் போது இணைந்து கொள்ளலாம் எனவும் சிபிஎம் மத்திய குழு முடிவு செய்துள்ளது.

கேரளாவை முன்வைத்து...
கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சியில் இருக்கின்றனர்; காங்கிரஸ்தான் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. கேரளாவில் எந்த ஒரு குழப்பமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக 5 மாநில தேர்தல்களில் மாநில குழுக்களே கூட்டணி குறித்து முடிவெடுக்கலாம் என கூறியிருக்கிறது. கேரளாவில் கடந்த ஓராண்டாக கட்சி பணிகளில் இருந்து சிகிச்சைக்காக கொடியேறி பாலகிருஷ்ணன் ஒதுங்கி இருக்கிறார். அவரை கட்சியில் மீண்டும் சேர்ப்பது குறித்து கேரளா மாநில கட்சியே முடிவு எடுக்கும் என்றும் பொலிட்பீரோ தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications