Flash Back 2023: 'பாரத்' முதல் பிபிசி, உதயநிதி, மஹூவா மொய்த்ரா, தயாநிதி மாறன் வரை.. டாப் சர்ச்சைகள்!
டெல்லி: 2023-ம் ஆண்டு நமது நாட்டை உலுக்கிய பல சர்ச்சைகள் நிகழ்ந்துள்ளன. இதில் சில முக்கியமானவற்றை பார்ப்போம்.
இந்தியா vs பாரத்: லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்கொள்ள 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கின. அப்போது டெல்லியில் ஜி 20 மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 'இந்தியா' என்ற பெயருக்கு பதில் மத்திய அரசு 'பாரத்' என்ற பெயரை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்திய பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக கூட "பாரத்" பிரதமர் மோடி என குறிப்பிடப்பட்டது. இதனால் நாட்டின் பெயரையே 'இந்தியா' என்பதற்கு பதில் பாரத் என மாற்றப் போகிறது மத்திய அரசு என எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம் சாட்டின. இதற்கு ஏற்ப அப்போது திடீரென நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூடப்பட பெரும் எதிர்பார்ப்பும் நிகழ்ந்தது. ஆனால் தற்போது வரை நாட்டின் பெயர் 'இந்தியா' என்றே தொடருகிறது.

மஹூவா மொய்த்ரா விவகாரம்: நாடாளுமன்றம் எத்தனையோ விசித்திரமான தகுதி நீக்கங்களை எதிர்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கினார் திரிணாமுல் காங்கிரஸ் மஹூவா மொய்த்ரா என்ற புதிய விவகாரத்தை எதிர்கொண்டது நாடாளுமன்றம். இது தொடர்பாக நாடாளுமன்ற நன்னடத்தை குழு விசாரணை நடத்தி மஹூவா மொய்த்ரா எம்பியை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைத்தது. நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் மஹூவா மொய்த்ரா எம்பியின் லோக்சபா எம்பி பதவி பறிக்கப்பட்டது. தற்போது இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
பகுஜன் சமாஜ் எம்பி ஒரு தீவிரவாதி: நாடாளுமன்றத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாஜகவை சேர்ந்த ரமேஷ் பிதூரி எம்பி உதிர்த்த வார்த்தைகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியாக இருந்த டேனிஷ் அலி, முஸ்லிம் என்பதால் லோக்சபாவிலேயே அவரை ஒரு தீவிரவாதி என கடுமையாக குற்றம் சாட்டினார் பாஜகவின் ரமேஷ் பிதூரி. ஆகையால் ரமேஷ் பிதூரி மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் டேனிஷ் அலி, கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதுதான் ட்விஸ்ட்.
மோடி குறித்த ஆவணப்படம்: பிரதமர் மோடி, குஜராத் மாநில முதல்வராக இருந்த போது 'மதக் கலவர வன்முறைகள்' தொடர்பாக பிபிசி ஊடகம் ஒரு ஆவணப் படம் வெளியிட்டது. பிரதமர் மோடியை பகிரங்கமாக குற்றம் சாட்டிய இந்த ஆவணப் படம் பெரும் சர்ச்சையானது. ஆனால் இந்த ஆவணப் படம் அறிவிக்கப்படாமல் தடை செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டது.
சனாதன தர்மம் ஒழிப்பு: சனாதன தர்மத்தை ஒழிப்போம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். ஆனால் சனாதன தர்மத்தை பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்வோம் என உதயநிதி ஸ்டாலின் பேசியதாக பாஜகவினர் திரித்து பிரசாரம் செய்தனர். இதற்காக பிரதமர் மோடி மத்திய அமைச்சரவையைக் கூட்டி, உதயநிதி ஸ்டாலின் விமர்சனத்துக்கு பதில் சொல்ல உத்தரவிட்டார். பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இடைவிடாமல் சனாதன தர்மத்தை பின்பற்றுவோரை ஒழிப்போம் என பேசுகிறார்கள் என பிரசாரம் செய்தனர்.
உ.பி, பீகார் மாநிலத்தவர் குறித்த தயாநிதி பேச்சு: 4 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசிய மீண்டும் பாஜகவினரால் சமூக வலைதளங்களில் பரப்பிவிடப்பட்டது. இந்தி மொழியை கற்பதால் எந்த பயனும் இல்லை; தமிழ்நாட்டில் கட்டிட வேலை, கழுவறை கழுவுகிற வேலையில் இந்தி படித்த உ.பி, பீகார் மக்களே ஈடுபடுகின்றனர் என்பதுதான் தயாநிதியின் பேச்சு. இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையாக வெடித்தது.












Click it and Unblock the Notifications