கண்டதையெல்லாம் ’Tea' என சொல்லக்கூடாது! அதிரடியாக உத்தரவிட்ட FSSAI! போலிகள் ஜாக்கிரதை! பறந்த வார்னிங்
டெல்லி: இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலையியல் ஆணையம் (FSSAI) "டீ" என்ற வார்த்தையை உணவுப் பொருட்களின் லேபிளில் பயன்படுத்துவது குறித்து புதிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதில், Camellia sinensis என்று அழைக்கப்படும் தேயிலைச் செடியில் இருந்து தயாரிக்கப்படும் பானங்களுக்கே சட்டப்படி "டீ" என்ற பெயரை பயன்படுத்தலாம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், கங்க்ரா டீ, கிரீன் டீ, இன்ஸ்டன்ட் டீ போன்றவை அனைத்தும் உணவு பாதுகாப்பு விதிகளின் கீழ் "டீ" எனப் பொருள்படும் என்று FSSAI தெரிவித்துள்ளது. ஆனால், அந்தச் செடியில் இருந்து தயாரிக்கப்படாத மூலிகை பானங்கள் அல்லது தாவர அடிப்படையிலான பானங்களுக்கு "டீ" என்ற பெயரைப் பயன்படுத்துவது மக்களை தவறாக வழிநடத்தும் செயலாகவும், சட்டப்படி 'மிஸ்பிராண்டிங்' ஆகவும் கருதப்படும் என எச்சரித்துள்ளது.

பல உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் "ஹெர்பல் டீ", "ரூயிபோஸ் டீ", "பிளவர் டீ" போன்ற பெயர்களில் பொருட்களை விற்பனை செய்து வந்ததாகவும், அவை டீ செடியில் இருந்து தயாரிக்கப்பட்டவை அல்லாததால் இது விதிமீறலாகும் என்றும் FSSAI குறிப்பிட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் சேர்வுகள் தொடர்பான விதிகளின் படி, டீ என்பது Camellia sinensis செடியில் இருந்தே தயாரிக்கப்பட வேண்டும் எனத் தெளிவாக உள்ளது. அதேபோல், ஒவ்வொரு உணவுப் பொருளின் பொதியிலும் அது உண்மையில் என்ன பொருள் என்பதை முன்புறம் தெளிவாக குறிப்பிட வேண்டியது கட்டாயம் என்று லேபிள் விதிகளும் கூறுகின்றன.
இதனால், டீ செடியிலிருந்து தயாரிக்கப்படாத மூலிகை நீராட்டல்கள் அல்லது தாவர கலவைகளுக்கு "டீ" என்ற வார்த்தையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயன்படுத்தக்கூடாது என்று FSSAI அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு செய்தால், அது சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மூலிகை பானங்கள் டீ எனக் கருதப்பட மாட்டாது என்றும், அவை தங்களது சேர்மப் பொருட்களைப் பொறுத்து ப்ரைப்ரைட்டரி உணவுகள் அல்லது அனுமதி பெற வேண்டிய உணவுகள் என்ற பிரிவிற்குள் வரக்கூடும் எனவும் விளக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, உற்பத்தி, பதப்படுத்தல், விற்பனை, இறக்குமதி, இ-காமர்ஸ் உள்ளிட்ட துறைகளில் செயல்படும் அனைத்து உணவுத் தொழில் நிறுவனங்களும் விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. டீ அல்லாத பொருட்களுக்கு "டீ" என்ற பெயரை இனி பயன்படுத்தக்கூடாது என்றும் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அனைத்து மாநிலங்களின் உணவுப் பாதுகாப்பு ஆணையர்களும், FSSAI பிராந்திய அலுவலர்களும் இந்த விதிகளைச் சீராக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதி மீறல் நடந்தால், உணவுப் பாதுகாப்பு சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் FSSAI எச்சரித்துள்ளது.இதன் மூலம், நுகர்வோர் குழப்பமடையாமல் இருக்கவும், தயாரிப்பு லேபிள்களில் தெளிவான தகவல் வழங்கப்படவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications