4 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வருகை தரும் சீனா வெளியுறவு அமைச்சர் சின் காங்- ஜி20 மாநாட்டில் பங்கேற்பு!
இந்தியா வருகை தருகிறார் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் சின் காங்.
டெல்லி: சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் சின் காங் வரும் மார்ச் 2-ந் தேதி இந்தியா வருகை தருகிறார். டெல்லியில் நடைபெறும் ஜி20 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் சின் காங் பங்கேற்க உள்ளார்.
சர்வதேச அளவில் ஜி20 நாடுகளின் கூட்டமைப்பு முதன்மையானது. ஜி20 கூட்டமைப்புக்கு தற்போது இந்தியா தலைமை வகித்து வருகிறது. ஜி20 கூட்டமைப்பில் இடம்பெற்ற நாடுகளின் பல்வேறு விவகாரங்களுக்கான அமைச்சர்கள், செயலாளர்கள் கூட்டம் தொடர்ந்து இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஜி20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு மார்ச் 2-ந் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்திருந்தார்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்று சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் (வெளி விவகார அமைச்சர்) சின் காங் (Qin Gang) மார்ச் 2-ந் தேதி டெல்லி வருகை தர உள்ளார். இதனை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் உறுதி செய்துள்ளார்.
2019-ம் ஆண்டுக்குப் பின்னர் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தருகிறார். 2020-ம் ஆண்டு இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா ஊடுருவி மோசமான தாக்குதலை நடத்தியது. லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து எல்லையில் சுமார் 31 மாதங்கள் இருநாடுகளிடையே பதற்றம் நிலவி வந்தது.
இருநாடுகளும் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. இருநாடுகளிடையே எல்லையில் இதுவரை 17 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. லடாக் எல்லைப் பகுதியில் பதற்றமான இடங்களில் இருந்து இருநாடுகளும் ராணுவ குவிப்பை திரும்பப் பெறவும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
லடாக் போலவே அருணாச்சல பிரதேச எல்லையிலும் சீனாவின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாருக்குள் சீன ராணுவத்தினர் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி ஊடுருவினர். இதனையடுத்து நமது ராணுவ வீரர்கள் சீன ராணுவத்தினரை தடுத்து நிறுத்தினர். இதனால் அருணாச்சல பிரதேச எல்லையிலும் சீனா பதற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர் சீன ராணுவத்தினர் தங்களது எல்லைக்குத் திரும்பினர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட இந்தியா,சீனா இடையே எல்லையில் படை குறைப்பு தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் பின்னணியில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் சீன வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்திய பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
2019-ம் ஆண்டு சீனா வெளியுறவுத் துறை அமைச்சராக வாங் யி, டெல்லியில் எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனையில் பங்கேற்றார். தற்போதைய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் சின் காங் தமது பதவி காலத்தில் முதல் முறையாக இந்தியா வருகை தருகிறார். இப்பயணத்தின் போது மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரையும் சின் காங் சந்தித்து பேசுவார் எனவும் கூறப்படுகிறது. ஆகையால் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் சின் காங் பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications