ஜி20 நாடுகள் தலைமை பொறுப்பை ஏற்கும் இந்தியா.. நவ.14-ல் இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி
டெல்லி: இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறும் ஜி 20 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக வரும் 14-ந் தேதி இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி.
சர்வதேச நாடுகளின் கூட்டமைப்புகளில் முக்கியமானது ஜி20. இதன் உச்சிமாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற உள்ளது. ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நவம்பர் 15,16-ல் நடைபெற உள்ளது.
ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், சீனா அதிகர் ஜின்பிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டில் ரஷ்யா அதிபர் புதின் பங்கேற்க போவது இல்லை என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தோனேசியா அதிபரின் அழைப்பின் பேரில், நவம்பர் 14-ல் அந்நாட்டுக்கு பிரதமர் மோடி செல்கிறார். 17-வது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
இந்த மாநாட்டில், ஜி20 கூட்டமைப்பின் புதிய தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கிறது. இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடா, ஜி20 தலைமைப் பொறுப்பை நமது பிரதமர் மோடியிடம் வழங்க உள்ளார்.
ஜி20 தலைமை பொறுப்பை நமது இந்தியா ஏற்கும் நிலையில் அதன் லோகோ, கருப்பொருள் ஆகியவற்றை பிரதமர் மோடி வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், 20 இலச்சினை என்பது வெறும் இலச்சினை. இது ஒரு செய்தி, இந்தியாவின் நரம்புகளில் ஓடும் உணர்வு. வாசுதைவ குடும்பகம்-உலகமே ஒரே குடும்பம் என்பது நம் எண்ணங்களில் எங்றும் நிறைந்திருக்கும் ஒரு தீர்மானம். உலகளாவிய சகோதரத்துவத்தின் சிந்தனை ஜி-20 இலச்சினை மூலம் பிரதிபலிக்கிறது. இலச்சினையில் உள்ள தாமரை இந்தியாவின் பண்டைய பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் சிந்தனையை குறிக்கிறது. அத்வைத்தின் தத்துவம், அனைத்து உயிரினங்களின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. இந்த தத்துவம் இன்றைய மோதல்களைத் தீர்க்கும் ஊடகமாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
மேலும் ஜி-20 இலச்சினையில் உள்ள தாமரை இது போன்ற கடினமான காலங்களில் நம்பிக்கையின் சின்னமாக உள்ளது. உலகம் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தாலும், அதை சிறந்த இடமாக மாற்ற நாம் முன்னேற முடியும். இந்தியாவின் அறிவு மற்றும் செழுமையின் இரு தெய்வங்களும் தாமரையின் மீது அமர்ந்திருக்கிறது. G-20 இலச்சினையில் தாமரையின் மீது பூமி வைக்கப்பட்டுள்ளது. தாமரையின் ஏழு இதழ்களின் முக்கியத்துவம் என்னவெனில் ஏழு கண்டங்களையும், ஏழு உலகளாவிய இசைக் குறிப்புகளையும் குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஏழு இசைக் குறிப்புகள் ஒன்றாக இணைந்தால், அவை சரியான இணக்கத்தை உருவாக்குகின்றன எனவும் கூறியிருந்தார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications