கங்கை நதி புனித நீராடுவதற்கு ஏற்றதுதான்.. நாடாளுமன்றத்தில் திட்டவட்ட பதில் தந்த பாஜக அரசு!
டெல்லி: கங்கை நதிநீர் பக்தர்கள் புனித நீராடுவதற்கு ஏற்றதுதான் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய அறிக்கையை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்தான் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் கும்பமேளாவில் புனித நீராடும் கங்கை நதி அசுத்தமானது என முன்னர் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் பசுமை தீர்ப்பாயத்திடம் கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடும் கங்கை நதியின் தூய்மை குறித்த அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அந்த அறிக்கையில், கங்கையில் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட பல மடங்கு அதிகமான கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள்- மலக் கழிவுகளில் இருந்து உருவாகும் கிருமிகள் இருப்பதாக தெரிவித்திருந்தது.

அத்துடன் கங்கை நீரில் மாசுக்கள் அதிக அளவு கலந்திருப்பதால் குளிக்க மற்றும் குடிக்க தகுதியற்ற நீர் என்பதையும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த அறிக்கை பெரும் விவாதப் பொருளானது. தேசிய பசுமை தீர்ப்பாயமும் இது தொடர்பாக ஆய்வு நடத்தி புதிய அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த அறிக்கையை உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு நிராகரித்தது.
மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கங்கை நதியின் தூய்மை குறித்து கேள்வி எழுப்பினர். இந்துத்துவா தத்துவத்தை பேசும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே, பகிரங்கமாக, கங்கை நதி அசுத்தமானது; அதில் யார் போய் குளிப்பது? அந்த நீரை புனிதமானது என குடிக்க சொன்ன போது மறுத்துவிட்டேன் எனவும் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி கட்சி எம்பி ஆனந்த் பகதூரியா மற்றும் காங்கிரஸ் எம்பி கே.சுதாகரன் ஆகியோர் கங்கை நதி அசுத்தமாக இருப்பது பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் புஹ்டிய அறிக்கையின்படி, நிர்ணயிக்கப்பட்ட அளவுதான் பாக்டீரியாக்கள் உள்ளிட்டவை கங்கை நதியில் கலந்து இருக்கின்றன; ஆகையால் உ.பி. பிரக்யாராஜ் திரிவேணி சங்கமத்தின் நதிநீர் (கங்கை- யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடம்) குளிப்பதற்கு ஏற்றதுதான் என தெரிவித்தார்.
மேலும் கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்கான தேசிய திட்டத்துக்கு மொத்தம் ரூ.7,421 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறினார்.












Click it and Unblock the Notifications