ராகுல் நல்லவர் தான்.. ஆனால், அரசியலுக்கு அவர் சரிப்பட்டு வரமாட்டார்.. விளாசி தள்ளிய குலாம் நபி ஆசாத்
டெல்லி: மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகி உள்ள நிலையில், அவர் ராகுல் காந்தி குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில் அக்கட்சியில் இருந்து பல மூத்த தலைவர்கள் வரிசையாக விலகி வருகின்றனர்.
ஏற்கனவே சிந்தியா, கபில் சிபில் உள்ளிட்ட தலைவர்கள் விலகிவிட்டனர். இந்தச் சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகி உள்ளார்.

குலாம் நபி ஆசாத்
அவர் பாஜகவில் இணையலாம் என முதலில் தகவல் வெளியானது. இருப்பினும், அதைத் திட்டவட்டமாக மறுத்த அவர், காஷ்மீரில் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார். இந்தச் சூழலில் பிரபல ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இன்றைய சூழலில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் காங்கிரஸ் காரியக் கமிட்டி அர்த்தமற்றதாக மாறவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், ராகுல் காந்தியின் அரசியல் செயல்பாடுகளையும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

காரிய கமிட்டி
அவர் மேலும் கூறுகையில், "தற்போது இருக்கும் காங்கிரஸ் காரியக் கமிட்டி அர்த்தமற்றது. சோனியா காந்தி தலைமையில் கட்சி இருந்த போது காங்கிரஸ் காரியக் கமிட்டி மட்டுமே இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நிலைமை அப்படி இல்லை. காங்கிரஸ் காரியக் கமிட்டியில் 25 பேர் மற்றும் 50 சிறப்பு அழைப்பாளர்கள் என நிலைமை மாறியது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் அதிக அளவில் ஆலோசனை செய்தனர். அவர்கள் பல்வேறுகட்ட ஆலோசனைக்குப் பின்னரே முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். ஆனால், ராகுல் காந்தி தலைமையில் அது முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

சோனியா காந்தி
உண்மை சொல்ல வேண்டும் என்றால் 1998 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் சோனியா காந்தி மூத்த தலைவர்களிடமே முக்கிய விவகாரங்களில் ஆலோசனை கேட்டார். மூத்த தலைவர்களின் ஆலோசனைகளை முழுமையாக நம்பி அவர் ஏற்றுக்கொண்டார். அவர் எனக்கு 8 மாநிலங்களை வழங்கிய நிலையில், அதில் 7 மாநிலங்களில் நான் வென்றேன். அவர் எந்த விதத்திலும் எனது முடிவுகளில் தலையிடவில்லை.

ராகுல் காந்தி
ஆனால், 2004இல் ராகுல் காந்தி வந்த பிறகு நிலைமை அப்படியே மாற தொடங்கியது. அவர் ராகுல் காந்தியை அதிகம் சார்ந்து இருக்கத் தொடங்கினார். ஆனால் அவருக்கு (ராகுல்) அந்த திறன் இல்லை. அனைத்து தலைவர்களும் ராகுல் காந்தியுடன் ஒருங்கிணைய வேண்டும் என்று சோனியா விரும்பினார். ராகுல் காந்தி நல்ல மனிதர் தான். ஆனால், அரசியலுக்கான தகுதி எதுவும் அவரிடம் இல்லை.

முற்றிய மோதல்
காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கும் ராகுல் காந்திக்கும் இடையேயான கருத்து வேறுபாடு முற்றும் புள்ளியாக 2019 மக்களவை தேர்தல் பிரசார சமயம் இருந்தது. பிரதமர் மோடிக்கு எதிராக அவர், "சௌகிதார் சோர் ஹை" என்ற முழக்கத்தை முன்வைத்தார். மூத்த தலைவர்கள் யாருமே அவரது முழக்கத்தை ஆதரிக்கவில்லை. இந்த முழக்கத்தை அவர் காங்கிரஸ் கூட்டத்தில் எழுப்பிய போது, அப்போதே மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் கூட அங்கு இருந்தனர்.

அரசியல்
இந்திரா காந்தியின் கீழ் தான் நாங்கள் அரசியல் பழகினோம். நான் அப்போது ஜூனியர் அமைச்சராக இருந்தேன். அவர் எங்களை அழைத்து அடல் பிஹாரி வாஜ்பாயை தொடர்ந்து சந்திக்க வேண்டும் என்று கூறினார். மூத்த தலைவர்களை மதிக்க வேண்டும் என்றே சொல்லி அரசியல் கற்றுக் கொடுத்தார்.

முடியாது
மூத்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் சமமான மரியாதை கொடுக்க வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடு. மூத்த எதிர்க்கட்சி தலைவர்களைத் தாக்கிப் பேச வேண்டும் எனச் சொல்லித் தரவில்லை. மோடியை மிகக் கடுமையாக விமர்சிக்க வேண்டும் என்பதே ராகுல் காந்தியின் நிலைப்பாடு. மூத்த தலைவர்கள் நாங்கள் எப்படி மரியாதைக் குறைவாகப் பேச முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications