அடிவாங்கும் இந்திய ஐடி துறை! H-1B விசா விஷயத்தில் விளையாடிய டிரம்ப்! வளர்ச்சி சுருங்கும் என வார்னிங்
டெல்லி: டிரம்ப் சமீபத்தில் ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தியிருந்தார். இதனால் இந்திய தகவல் தொழில்நுட்ப சேவையின் ஏற்றுமதி 4 சதவிகிதத்திற்கும் கீழ் குறையும் என எச்சரிக்கை எழுந்திருக்கிறது.
அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் H-1B விசாவை வைத்து வேலை செய்து வருகிறார்கள். அதில் 71% அதிகமாக, அதாவது 3.5 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் இந்தியர்கள் ஆவார்கள். அமெரிக்க ஐடி நிறுவனங்கள் திறமையான வெளிநாட்டினரை வைத்து வேலை வாங்கவே இந்த H-1B விசா முறை பின்பற்றப்பட்டு வருகிறது. H-1B விசா என்பது தற்காலிக குடியுரிமை போன்றது.

இந்தியாவில் இருக்கும் இளைஞருக்கு அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது எனில், அந்த இளைஞருக்கான H-1B விசா கட்டணத்தை நிறுவனம்தான் செலுத்தும். ஆனால் சமீப காலமாக அமெரிக்க நிறுவனங்களுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது. அதாவது உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தல்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இப்படி இருக்கையில் டிரம்ப் தலைமையிலான அரசும் இந்த கோரிக்கையை ஐடி நிறுவனங்களை ஏற்ற வேண்டும் என காட்டாயப்படுத்தியிருக்கிறது. இந்த பின்னணியில்தான் வெளிநாட்டிலிருந்து H-1B விசா மூலம் அமெரிக்கா வந்து வேலை செய்பவர்களை குறைக்கும் விதமாக H-1B விசா கட்டணத்தை டிரம்ப் அதிகரித்திருக்கிறார்.
முன்னர் ரூ.8.8 லட்சமாக இருந்த கட்டணம் இப்போது ரூ.88 லட்சமாக மாறியிருக்கிறது. இது அமெரிக்க ஐடி துறையை அதிர்ச்சியில் ஆழத்தியிருக்கிறது. மறுபுறம் இந்திய ஐடி ஏற்றுமதி துறையும் கடுமையாக பாதிக்கப்பட உள்ளது. ஏனெனில் அமெரிக்காவுக்கு நாம் பொருட்களை ஏற்றுமதி செய்வதை விட ஐடி தொழிலாளர்களைத்தான் அதிகம் ஏற்றுமதி செய்கிறோம். ஆனால் இனி, ரூ.88 லட்சம் கொடுத்து H-1B விசாவை வாங்கி இந்திய தொழிலாளர்களை பணியில் அமர்த்த அமெரிக்க நிறுவனங்கள் யோசிக்கும்.
இதனால் இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை ஏற்றுமதி வளர்ச்சி கடுமையாக சரியும். எம்கே என்ற நிதி சேவை நிறுவனம் இது குறித்து கூறுகையில், எதிர்காலத்தில் இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை ஏற்றுமதின் வளர்ச்சி 4 சதவீதத்திற்கும் கீழ் குறையக்கூடும் என்று எச்சரித்துள்ளது. கட்டண உயர்வுக்கு முன்னர் இந்த வளர்ச்சியானது அடுத்த ஆண்டு 5% இருக்கும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வளர்ச்சி 7% அளவுக்கு உயரும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இனி இதற்கான வாய்ப்பு குறைவு.
விசா கட்டணங்களின் தாக்கம்
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் ஏற்றுமதி 2025 நிதியாண்டில் 15.96 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. விசா கட்டண உயர்வு மற்றும் குளோபல் கேப்பபிலிட்டி சென்டர்களின் மாறிவரும் பங்கு காரணமாக எதிர்கால ஏற்றுமதி, வளர்ச்சியை பாதிக்கலாம் என எச்சரிக்கை எழுந்திருக்கிறது. இந்தியாவில் அமைக்கப்படும் குளோபல் கேப்பபிலிட்டி சென்டர் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் வணிகச் செயல்பாடுகளுக்காக ரூ.5.73 லட்சம் கோடிக்கும் அதிகமான மொத்த ஏற்றுமதிக்கு பங்களிக்கிறது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாய் மற்றும் இலாப வரம்புகளில் உடனடியாக பெரிய தாக்கம் இல்லாவிட்டாலும், நீண்டகால அதிக விசா கட்டணங்கள் பாரம்பரிய ஏற்றுமதி மாதிரிகளை பாதிக்கலாம். திட்டச் செலவுகளை அதிகரிக்கலாம் மற்றும் இலாப வரம்புகளைக் குறைக்கலாம். குறிப்பாக வெளிநாட்டுப் பணியாளர்கள் தேவைப்படும் திட்டங்களுக்கு இது பொருந்தும் என்று எம்கே நிறுவனம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications