ஹமாஸ் போன்று.. இந்தியாவிலும் தாக்குதல் நடத்தப்படும்.. மோடியை மிரட்டிய காலிஸ்தான் பயங்கரவாதி - ஷாக்
டெல்லி: பஞ்சாப்பை தொடர்ந்து ஆக்கிரமித்து இருந்தால் ஹமாஸ் அமைப்பு போன்று இந்தியாவில் தாக்குதல் நடத்தப்படும் என பிரதமர் மோடிக்கு காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் வீடியோவில் மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப்பில் சீக்கியர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பஞ்சாப்பை தனி நாடாக காலிஸ்தான் என அறிவிக்க வேண்டும் என சில சீக்கிய அமைப்புகள் கோரிக்கை வைத்தன.

இதனை இந்தியா ஏற்கவில்லை. இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான செயலில் சில அமைப்புகள் இறங்கிய நிலையில் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
அதோடு பஞ்சாப்பை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடு கோரி சதிச்செயல்களில் ஈடுபட்டு வரும் அமைப்புகள் காலிஸ்தான் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் தங்கி இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டி வருகின்றன. அவர்களை பொறுத்தமட்டில் பஞ்சாப் என்பது இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என்பது தான் வாதமாகவே இருந்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் தடை செய்யப்பட்ட எஸ்எப்ஜே எனும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கு வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:
உலகில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. பஞ்சாப் முதல் பாலஸ்தீனம் வரை சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் எதிர்வினையாற்றுவார்கள். இது வன்முறையாக மாறும். பிரதமர் மோடி இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
அதோடு இந்தியா தொடர்ந்து பஞ்சாப்பை ஆக்கிரமித்தால், அதற்கு நிச்சயம் எதிர்வினை (தாக்குதல்) ஏற்படும். இந்த எதிர்வினைக்கு பிரதமர் மோடியும், இந்தியாவும் தான் பொறுப்பாகும். இந்த தாக்குதல் தேவையா? என்பது உங்களின் கைகளில் தான் உள்ளது'' என தெரிவித்துள்ளார். அதோடு மிரட்டும் தொனியில் கைகளை வைத்து கேமராவை சுடுவது போன்றும் அவர் சைகை காண்பித்துள்ளார். தற்போது காசா பகுதி தொடர்பாக பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தொடர்ந்துள்ள நிலையில் தான் அதனை குறிப்பிட்டு அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இப்படி மிரட்டில் விடுத்துள்ள குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது இந்தியாவில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் கூட கனடாவில் காலிஸ்தான் புலிப்படையின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ கூறி பரபரப்பை கிளப்பினார். இந்த வேளையில் குர்பத்வந்த் சிங் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்தார்.
அதாவது ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையால் இந்தியாவை எஸ்எப்ஜே அமைப்பு பழிவாங்கும். உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக தாக்குதல் நடத்தப்படும் என தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இதேபோல் குர்பத்வந்த் சிங் மீது பல வழக்குகள் இந்தியாவில் நிலுவையில் உள்ளன. பல பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இப்படி மிரட்டல் விடுத்து வரும் குர்பத்வந்த் சிங் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்தார். அதன்பிறகு அமெரிக்காவில் வசித்து கொண்டு இப்படி இந்தியாவுக்கு எதிராக அடிக்கடி மிரட்டல் விடுத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications