தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
டெல்லி: லோக்சபா தேர்தலில் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சி பெண்களின் தாலியை பறிக்கும் என பிரதமர் மோடி பேசியதற்கு காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்தார். தனது பாட்டி இந்திரா காந்தி சீனா போரின்போது தனது தங்கத்தை கொடுத்தார். தாய் சோனியா தனது தாலியை தியாகம் செய்தார் என அவர் தெரிவித்தார். இந்நிலையில் தான் இந்திரா காந்தி தனது தங்கத்தை நாட்டுக்காக வழங்கிய போட்டோ இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
நம் நாட்டில் லோக்சாப தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து 2வது கட்ட தேர்தல் நாளை 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த பிரசாரத்தின்போது பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் மாற்றி மாற்றி கடுமையாக விமர்சனம் செய்து கொண்டனர்.

ராஜஸ்தான் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ‛‛நாட்டு மக்களின் சொத்துகளில் இஸ்லாமியர்களுக்கு தான் முதல் அதிகாரம் என காங்கிரஸ் தெரிவித்தது. ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக நாட்டின் செல்வத்தை மறுபங்கீடு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அப்படியென்றால் நம் தாய்மார்கள், சகோதரிகளின் தாலி கூட மிஞ்சாது'' என தெரிவித்து இருந்தார்.
பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு மிக பெரிய சர்ச்சையாக மாறியது. எதிர்க்கட்சியை சேர்ந்த பலரும் பிரதமர் மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.. மேலும், மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் பெங்களூரில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்தார்.
பிரியங்கா காந்தி பேசுகையில், ‛‛கடந்த சில நாட்களாக உங்கள் வசம் உள்ள தங்கம் மற்றும் மாங்கல்யத்தை காங்கிரஸ் கட்சி பறிக்கும் என சொல்லப்பட்டு வருகிறது. தேசம் விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் ஆகும் நிலையில் காங்கிரஸ் 55 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. அப்போது உங்கள் தங்கத்தை அல்லது மாங்கல்யத்தை பறித்தார்களா?
போரின் போது தேசத்துக்காக தனது தங்கத்தை கொடுத்தவர் இந்திரா காந்தி. மாங்கல்யத்தை தியாகம் செய்தவர் எனது அம்மா. பெண்களின் போராட்டத்தை பாஜகவினரால் புரிந்து கொள்ள முடியாது. அது புரிந்திருந்தால் பிரதமர் மோடி அப்படி பேசியிருக்க மாட்டார்'' என பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் போரின் போது இந்திரா காந்தி நகையை வழங்கியது தொடர்பான போட்டோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதாவது 1962ல் சீனாவுக்கு எதிராக போருக்காக நாட்டு மக்களிடம் அப்போதைய பிரதமர் நேரு உதவி கோரினார். நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் நகைகளை வழங்கினர். அப்போது இந்திரா காந்தியும் தனது நகையை வழங்கினார். இதுபற்றி இந்திரா காந்தியின் பேத்தி பிரியங்கா காந்தி பேசி பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த நிலையில் இந்த போட்டோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியா-சீனா போர் ஏன்: இந்தியா - சீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை உள்ளது. சீனா அடிக்கடி அத்துமீறி நம் நாட்டின் பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது. அப்படித்தான் இதற்கு முன்பு இந்தியா, பூடான், திபெத் சந்திப்பில் இருக்கும் தோலா போஸ்டை சீனா ஆக்கிரமித்தது. மேலும் இந்தியாவின் பிற பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா அத்துமீறி நுழைந்தது. லடாக்கின் சுசுலில் இருந்து இந்தியாவின் வடகிழக்கில் உள்ள வால்லாங் வரையிலான நிலத்தை சீனா ஆக்ரமித்தது.
இதையடுத்து சீனா படையை எதிர்க்கவும், ஊடுருவலை முறியடிக்கவும் அப்போதைய பிரதமர் நேரு மக்களிடம் உதவி கேட்டார். நகைகள் வழங்குமாறு பெண்களை கேட்டு கொண்டார். இதையடுத்து நாட்டின் பாதுகாப்புக்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மக்கள் தங்களின் நககைளை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications