ரிசல்ட் வெளியான 5 நாட்களில்.. ரூ.750 கோடி அதிகரித்த சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு
டெல்லி: லோக்சபா தேர்தலில் கிங் மேக்கராக உருவெடுத்துள்ள சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் மதிப்பு கடந்த 5 நாட்களில் சுமார் ரூ.750 கோடி வரை அதிகரித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியானது. அதில் தேசியளவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கிறது.

பாஜகவின் என்டிஏ கூட்டணியில் தெலுங்கு தேசம் மிக முக்கிய கட்சியாக இருக்கிறது. ஏனென்றால் தெலுங்கு தேசம் கட்சியிடம் மட்டும் 16 எம்பி சீட்கள் உள்ளன.
சந்திரபாபு நாயுடு: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பெற்ற மிகப் பெரிய வெற்றி அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை கிங் மேக்கராக மாற்றி இருக்கிறது. பாஜகவுக்கு ஆதரவு தர ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து, கேபினட் அமைச்சரவை என சில கண்டிஷன்களை சந்திரபாபு நாயுடு கேட்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த தேர்தல் முடிவுகள் பங்குச்சந்தையிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹெரிடேஜ் ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஐந்து நாட்களில் 55 சதவிகிதம் அதிகரித்துள்ளது.. சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்றால் இந்த நிறுவனத்தின் பங்குகள் எதற்காக உயர்ந்துள்ளது என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இரண்டிற்கும் தொடர்பு இருக்கிறது
ஹெரிடேஜ்: இந்த ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தைத் தொடங்கியவரே சந்திரபாபு நாயுடு தான். கடந்த 1992இல் அவர் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.. இது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது இந்த நிறுவனம் இரு முக்கிய துறைகளில் கவனம் செலுத்தி வருகிறது. ஒன்று பால் மற்றும் பால் பொருட்கள்.. இரண்டாவது புதுப்பிக்கத்தக்க ஆற்றல்..
ஹெரிடேஜ் பால் நிறுவனம் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானாவில் வலுவாக இருக்கிறது. இது தவிர , கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிசா, என்சிஆர் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் அந்த நிறுவனத்திற்குக் கணிசமாக மார்க்கெட் இருக்கிறது.
சொத்து மதிப்பு: இப்போது இந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஷ்வரி இருக்கிறார். கடந்த 5 நாட்களில் இந்த நிறுவனத்தின் பங்குகள் 55% வரை அதிகரித்துள்ளது. அதாவது தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பு ஜூன் 3ஆம் தேதி இந்த நிறுவனத்தின் பங்கு ரூ. 424க்கு வர்த்தகமானது. இப்போது அதன் பங்கு ₹ 661.25 ஆக உள்ளது.
இதன் மூலம் நாரா புவனேஷ்வரியின் சொத்து மதிப்பு ₹ 535 கோடியாக உயர்ந்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஷ்வரி இந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷுக்கும் இந்த நிறுவனத்தில் கணிசமான பங்குகள் இருக்கிறது. அவரது சொத்து மதிப்பும் கடந்த சில நாட்களில் ரூ. 237.8 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர தேர்தல்: ஆந்திராவில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 21 இடங்களில் தெலுங்கு தேசம் கூட்டணி வென்றது. தெலுங்கு தேசம் நேரடியாக 16 தொகுதிகளைக் கைப்பற்றிய நிலையில், பாஜக 3 இடங்களிலும் பவன் கல்யாணின் ஜனசேனா 2 தொகுதிகளிலும் வென்று இருந்தது.












Click it and Unblock the Notifications