2வது அலை.. பயங்கர வேகத்தில் பரவுதே கொரோனா.. போன வருஷம் இப்படி இல்லையே.. என்ன காரணம் தெரியுமா?
டெல்லி: கடந்த ஆண்டு நாடு முழுக்கப் பரவிய கொரோனா வைரஸ் நோய் தாக்கத்துடன் ஒப்பிட்டால் இரண்டாவது அலை வித்தியாசமாக இருக்கிறது என்கிறார்கள் இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் டாக்டர்கள்.
கடந்த ஆண்டு கோடை காலத்தில் இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் பெரும் பரவலை ஏற்படுத்தி, தாக்கத்தை ஏற்படுத்தியது. சில பகுதிகளில் மருத்துவமனைகளில் நோயாளிகளை சேர்ப்பதற்கு கூட இடம் கிடைக்காத நிலை உருவானது.
ஆனால், நவம்பர், டிசம்பர் மாதங்களில், நோய்தொற்று வேகம் குறைந்து வந்ததால் மக்கள் மெல்லமெல்ல நிம்மதி அடைந்தனர்.

அதிக அளவு
ஆனால், இப்போது நம் நாட்டில், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வீசுவதாக கூறப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 68 ஆயிரத்து 20 புதிய கொரோனா வைரஸ் நோய் தொற்று பதிவாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து முதல் முறையாக ஒரே நாளில் இவ்வளவு அதிகமான நோய் தொற்று பதிவாகியுள்ளது இப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

வேகமாக பரவுகிறது
கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் வரையிலான நிலவரப்படி கொரோனா வைரஸ் எவ்வளவு வேகமாக பரவியதோ அதைவிட இப்போது மிக வேகமாக பரவுவதாக கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் கேஸ் பதிவதற்கு 32 நாட்கள் அப்போது தேவைப்பட்டது. ஆனால் இப்போது இரண்டாவது அலை வீசக்கூடிய காலகட்டத்தில் இதே அளவை எட்டிப்பிடிக்க சுமார் 16 நாட்கள் தான் அல்லது 17 நாட்கள்தான் தேவைப்படுகிறது என்கிறது புள்ளிவிபரம். உதாரணத்துக்கு மார்ச் மாதம் 11ம் தேதி 18 ஆயிரத்து 377 என்ற அளவில் பதிவான கேஸ், மார்ச் 27ஆம் தேதி 50 ஆயிரத்து 518 என்ற அளவுக்கு அதிகரித்தது.

மகாராஷ்டிரா பாசிட்டிவ் ரேட்
கொரோனா வைரஸ் நோய் பரவல் முதல் அலை வீசியபோது மகாராஷ்டிராவில் 11000 கேஸ்கள், 21 ஆயிரத்து 900 என்ற அளவை எட்டி பிடிக்க 31 நாட்கள் தேவைப்பட்டது . ஆனால் இப்போது வெறும் 9 நாட்களில் இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது . மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் ரேட் 21 சதவீதம் என்ற அளவுக்கு மிக மிக அதிகமாக இருக்கிறது. பரிசோதனையில் தெரிய வந்ததை வைத்து இந்த அளவுக்கு நோய்த்தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்றால் பரிசோதனை செய்யப்படாத எத்தனை பேருக்கு இது போல நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

இதுதான் காரணம்
மகாராஷ்டிரா தலைநகரம் மும்பை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது . குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் இந்த முறை அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதை பார்க்க முடிகிறது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல் , திருவிழா காலம் உள்ளிட்டவை நோய் பரவலை மேலும் அதிகரித்து விடும் என்ற அச்சம் மருத்துவத்துறை நிபுணர்களிடம் இருக்கிறது. இன்னொரு பக்கம், உருமாற்றம் அடைந்த வைரஸ் பரவல் முந்தைய வைரஸ் பரவலை விட அதிக வேகத்தில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். ஒருபக்கம் அனைத்து துறைகளும் திறந்துவிடப்பட்டு விட்டது. இன்னொரு பக்கம் வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதால் அது பரவும் வேகம் அதிகமாக இருக்கிறது. எனவேதான் இது போல வேகமாக நாடு முழுக்க வைரஸ் வருவதாக கூறுகிறார்கள்.

என்ன வித்தியாசம்
முதல் அலை மற்றும் இந்த இரண்டாவது ஆகியவற்றுக்கு இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், முதல் அலை ஏற்பட்டபோது நாடு முழுக்க பெரும்பாலான மாநிலங்களில் ஒரே மாதிரியாக பாதிப்பு இருந்தது. இந்த முறை சுமார் 8 மாநிலங்களில் மட்டும் 84 சதவீதம் புதிய வைரஸ் பாதிப்பு பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் ஐந்து மாநிலங்களில் 80% அளவுக்கு நோய் பரவல் இருக்கிறது. மகாராஷ்டிரா மட்டும் சுமார் 60% புதிய நோய் தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இதுதான் முதல் அலை மற்றும் இப்போது இரண்டாவது அலை ஆகியவற்றிற்கு இடையேயான வித்தியாசம் என்கிறார்கள்.

விழிப்புணர்வு தேவை
கடந்த வருடம் முதல் அலை வந்தபோது மக்களில் பெரும்பாலானோருக்கு இந்த நோயை எப்படி எதிர்கொள்வது என்பதில் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது . இப்போது போதிய அளவுக்கு விழிப்புணர்வு மற்றும் அனுபவம் வந்துவிட்டது. ஆனால் அதை செயல்படுத்துவதற்கு மக்கள் தயங்கக்கூடாது. பொது இடங்களுக்கு செல்லும் போது 6 அடி இடைவெளி விட்டு தான் ஒவ்வொரு நபர்களும் நின்று பேசுவது அல்லது வேறு பணிகளை செய்வது இருக்க வேண்டும். எப்போதும் மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றில் முக கவசம் இருக்க வேண்டும். அவ்வப்போது சோப்பு போட்டு கை கழுவுவது , சானிடைசர் வைத்து கை கழுவுவது போன்ற பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

தடுப்பூசிதான் ஒரே வழி
முதல் அ்லை ஏற்பட்டபோது நம்மிடம் எந்த ஒரு தடுப்பு மருந்தும் கிடையாது. இப்போது இந்தியாவில் இரண்டு வகை தடுப்பூசிகள் புழக்கத்தில் இருக்கின்றன. அவை வெகுஜன மக்களிடம் சென்று சேரும் வரை நாம் மிக மிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். கொரோனா வைரஸ் நோய் பரவல் காரணமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் மரணமடைவது அதிகமாக இருப்பதாக மருத்துவ துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள் . எனவேதான் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் இணை நோய்கள் இல்லா விட்டாலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே மக்கள் தங்களையும் தங்கள் சுற்றம் உற்றார் உறவினர்கள் அனைவரையும் காத்துக்கொள்ள, தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான் ஒரேவழி என்கிறார்கள் விஞ்ஞானிகள்.