பாக். ட்ரோன் அட்டாக் தடுக்கப்பட்டது எப்படி? வான் பாதுகாப்பு அம்சத்தை அப்கிரேட் செய்த இந்திய ராணுவம்
டெல்லி: கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவின் ராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனை நமது ராணுவம் முழுமையாக முறியடித்திருக்கிறது. இதற்கு காரணம் நமது மேம்பட்ட வான் பாதுகாப்பு அம்சம்தான்.
இந்தியா பயன்படுத்திய வான் பாதுகாப்பு அம்சங்கள் என்ன? எப்படி பாகிஸ்தான் ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டன என்பதை இந்த செய்தி விவரிக்கிறது.

கடந்த இரண்டு நாட்களில் சுமார் 300-400 ட்ரோன்களை பாகிஸ்தான் அனுப்பியிருந்தது. இதில் பெரும்பாலானவை துருக்கியின் அசிஸ்கார்ட் சோங்கர் வகையை சேர்ந்ததாகும். இவை அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இது தவிர 3 அலைகளாக 500க்கும் அதிகமான குவாட்காப்டர் ட்ரோன்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் சிக்கல் என்னவெனில், இவை அளவில் சிறியவை. குட்டி ட்ரோன்களை ரேடார்களில் நம்மால் கண்டுபிடிக்க முடியாது. இவற்றைக் கண்டுபிடிக்க லோ-லெவல் லைட்வெயிட் தேவை.
இந்த வகை ரேடார்கள் 5-10 கி.மீ தொலைவில் உள்ள ட்ரோன்களை எளிதில் கண்டுபிடித்துவிடும். எவ்வளவு சிரியதாக இருந்தாலும் அதை கண்டுபிடித்துவிடலாம். உக்ரைன் போரில் இந்த ரேடார் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை வைத்துதான் ரஷ்ய ட்ரோன்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவிடம் இது இருக்கிறது. இதைக்கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் முறியடிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல L-70, Zu-23, ஷில்கா போன்ற துப்பாக்கிகளும் ட்ரோன்களை வழிமறித்து தாக்கியுள்ளன. இதில் L-70 என்பது ஸ்வீடனின் போபோர்ஸ் தயாரிப்பாகும். ஒரு நிமிடத்திற்கு இதிலிருந்து 240 குண்டுகள் தெறிக்கும். 4 கி.மீ தூரம் வரை இதை கொண்டு தாக்க முடியும். மற்றொரு துப்பாக்கியான ZU-23-2, ரஷ்ய தயாரிப்பாகும். குறைந்த உயரத்தில் பறக்கும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இது அழிக்கும் திறன் கொண்டது. மூன்றாவது துப்பாக்கியின் பெயர் ஷில்கா (ZSU-23-4). இந்த துப்பாக்கியால் நிமிடத்திற்கு 1000 குண்டுகள் வரை சுட முடியும்.
இது தவிர, ஹாரோப் மற்றும் ஹார்பி லாய்டரிங் முனிஷன்கள் கொண்டு பாகிஸ்தான் இலக்கை இந்தியா தாக்கியிருக்கிறது. மற்றபடி பெரிய அளவில் வெளியில் தெரிந்த வான் பாதுகாப்பு அம்சம் ரஷ்யாவிடம் வாங்கிய எஸ்-400. இது 400 கிமீ வரை இலக்கை தாக்கும் திறன் கொண்டது. MRSAM ஏவுகணை 70 கிமீ வரை இலக்கை தாக்கும். ஆகாஷ் ஏவுகணை 25 கிமீ தூரமும், இஸ்ரேலிய ஸ்பைடர் ஏவுகணை 10 கிமீ தொலைவிலும் ஒசா-AK, துங்குஸ்கா, இக்லா-S குறுகிய இலக்குகளையும் தாக்கும்.
எதிர்காலத்தில் L-70 & Zu-23 துப்பாக்கிகளுக்கு பதிலாக 220 புதிய ஸ்மார்ட் துப்பாக்கிகளையும், ட்ரோன் தாக்குதல்களுக்கு 30mm ஃபிராக்மென்டேஷன் தோட்டாக்களையும் வாங்க இந்தியா திட்டமிட்டு வருகிறது. இந்த புதிய துப்பாக்கியில் ஆட்டோமேட்டட் டார்கெட் டிராக்கிங் வசதியும், லேசர்/எலக்ட்ரோ-ஆப்டிகல் கண்ட்ரோல், ட்ரோன் குழுக்களை தானாக கண்டறிந்து தாக்கும் ஸ்மார்ட் ஆம்மோ வசதியும் இருக்கும். இதனை உள்நாட்டு வசதிக்கு ஏற்பட மாற்றியமைத்துக்கொள்ளவும் முடியும்.
30mm ஃபிராக்மென்டேஷன் தோட்டாக்கள் ட்ரோன்களை அழிக்க தனிச்சிறப்பாக உருவாக்கப்பட்டவை. இவை துப்பாக்கியிலிருந்து பாயும் போது ஒரு குண்டாக இருக்கும். ட்ரோன் அருகில் போகும்போது வெடித்து சிதறி பல அலுமினிய துகள்களாக ட்ரோன்களை தாக்கும். இதனால் ட்ரோன்கள் முழுமையாக சேதமடையும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications