நெடுஞ்சாலைகளில் போர் விமான ஓடுதளங்கள்! இனி யுத்தம்னு வாலாட்டினால் சீனாவை வெச்சு செய்யும் இந்தியா!
டெல்லி: அதிவிரைவு நெடுஞ்சாலைகளில் போர் விமான ஓடுதளங்களை இந்தியா அடுத்தடுத்து அமைத்திருப்பதன் மூலம் எல்லையில் போர் விமானங்களைக் குவித்து வரும் சீனாவுக்கு வரும்காலத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்கிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர் பாதுகாப்பு ஆய்வாளர்கள்.
நாட்டிலேயே உ.பி. மாநிலத்தில்தான் நெடுஞ்சாலைகளில் போர் விமான ஓடுபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆக்ரா-லக்னோ அதிவிரைவு நெடுஞ்சாலையில் முதலில் விமான ஓடு பாதை அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது பூர்வாஞ்சல் அதிவிரைவு நெடுஞ்சாலையில் விமான ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை விமான ஓடு தளம்
பூர்வாஞ்சல் நெடுஞ்சாலையில் குரேபார் என்ற இடம் அருகே 3.2 கி.மீ. தொலைவுக்கு இந்த விமான ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான ஓடுதளத்தில் பிரதமர் மோடி பயணம் செய்த ஹெர்குலிஸ் விமானம் முதலில் தரை இறங்கியது. இதனைத் தொடர்ந்து, மிராஜ்2000, சுகோய், ஹெர்குலிஸ் போர் விமானங்கள் தரை இறங்கி சாகசம் நிகழ்த்தின.

சீனாவுக்கு பதிலடி ரெடி
இந்த சாகச நிகழ்ச்சிகள் ஒரு அரசாங்கத்தினது வழக்கமான நிகழ்ச்சி நிரலாக மட்டுமே பார்க்க முடியாது என்கின்றனர் பாதுகாப்பு ஆய்வாளர்கள். ஏனெனில் எல்லையில் அதுவும் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதி அருகே சுமார் 100 கி.மீ. தொலைவுக்குள்ளேயே சீனா கடந்த சில ஆண்டுகளா சிறு சிறு விமான தளங்களை உருவாக்கி எண்ணற்ற போர் விமானங்களை தயார் நிலையில் இறக்கி வைத்திருக்கிறது. இதற்கு சரியான பதிலடி கொடுத்து நாமும் தயார் நிலையில் இருக்க வேண்டிய தேவை உள்ளது என்பது அவர்களின் கருத்து.

எதிரிகளிடம் இருந்து தற்காப்பு
தற்போது குரேபர் விமான ஓடு பாதை அமைக்கப்பட்டுள்ள இடம் அருகே கான்பூர், பரேலி, கோரக்பூர் ஆகிய 3 விமான தளங்கள் இருக்கின்றன. மிக மோசமான அவசர காலங்களில் இத்தகைய ஓடுபாதைகளில் போர் விமானங்கள் இறங்கி எரிபொருள் நிரப்பி செல்ல முடியும். இந்த நெடுஞ்சாலைகள் விமான ஓடுபாதைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் விமானப் படை அதிகாரிகள், இவை அனைத்தும் அதிநவீன மிராஜ்2000, C-130 ஜெ ஹெர்குலிஸ் போர் விமானங்கள் தரை இறங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானுடனான யுத்தங்களில் அவர்களின் முதல் இலக்கு நமது விமான படை தளங்களாக இருந்தது.

சீனாவுக்கு காத்திருக்கிறது ஆபத்து
எதிரிகள் விமான படை தளங்களை இலக்கு வைக்கும் போது இது போன்ற நெடுஞ்சாலை விமான ஓடுபாதைகள் நமக்கு யுத்த காலங்களில் பேருதவியாக இருக்கும். ஆகையால் இத்தகைய நெடுஞ்சாலை விமான ஓடுபாதைகளில் விமானப் படை கவனம் செலுத்தி இருக்கிறது என்கின்றனர். எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் பல இடங்களில் பதுங்கு குழிகளை அமைத்து போர் விமானங்களை தயார் நிலையில் சீனா வைத்திருக்கலாம். ஆனால் சீனாவுக்கு வரும் காலங்களில் பதிலடி தரும் வகையில் இத்தகைய நெடுஞ்சாலை ஓடுபாதைகள் கை கொடுக்கப் போகின்றன என பெருமிதப்படுகின்றனர் பாதுகாப்புப் படை அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications