"முட்டாள்தனமானது!" என்று 2013இல் ராகுல் காந்தி செய்த காரியம்! இன்று அதுவே அவருக்கு எதிராக போன சோகம்
டெல்லி: ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்துள்ளார். ராகுல் காந்தி இப்போது தனது எம்பி பதவி இழக்க 2013இல் அவர் செய்த ஒரு காரியமும் காரணமாக இருக்கிறது என்பது தெரியுமா.. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ராகுல் காந்தி இப்போது அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் 2019 தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்துள்ளார். இப்போது ராகுல் காந்தி பதவி இழக்க 2013இல் அவர் செய்த ஒரு காரியமும் காரணமாக இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா.. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

ராகுல் காந்தி
கடந்த 2019 மக்களவை தேர்தலை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டது. அப்போது கர்நாடகாவின் கோலர் பகுதியில் பிரசாரத்தின் போது பேசிய ராகுல் காந்தி, மோடி என்ற பெயர் வைத்த அனைவரும் ஒரே போல இருப்பதாகச் சொன்னார். மேலும், ஒரு சர்ச்சை கருத்தையும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தான் மோடி சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாகக் குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

பகவி நீக்கம்
சூரத் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. இதனிடையே இந்த வழக்கில் சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வந்தது. அதில் ராகுல் காந்தியைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் எம்பி பதவியை இழந்தார். ராகுல் காந்தி எம்பி பதவியை இழந்ததாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வயநாடு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

மேல்முறையீடு மட்டும் போதாது
ராகுல் காந்திக்குத் தண்டனை விதித்த அதே சூரத் கோர்ட், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கவும் ஒப்புக் கொண்டது. மேல்முறையீடு செய்ய உயர் நீதிமன்றங்களை அணுக அவருக்கு 30 நாட்கள் வழங்கப்பட்டது. அதேநேரம் மேல்முறையீடு செய்தால் மட்டுமே போதாது.. 2013, 2018இல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளின்படி, ராகுல் காந்தி எம்பி பதவி பறிப்பில் இருந்து தப்ப தண்டனையை நிறுத்தி வைப்பது அவசியமாகிறது. இதற்கு ராகுல் காந்தி 2013இல் செய்த ஒரு காரியமும் காரணமாக இருக்கிறது என்பது தெரியுமா.. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

2013இல் என்ன நடந்தது
கடந்த 2013ஆம் ஆண்டு லில்லி தாமஸ் வழக்கில், எம்பி அல்லது எம்எல்ஏ ஒருவர் தண்டிக்கப்பட்ட பிறகு பதவியில் நீடிக்க அதிகாரம் வழங்கிய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(4)ஐ உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. மேல்முறையீடு செய்தாலே பதவியில் நீடிக்க முடியும் என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்ப்பு வந்த ஐந்தே மாதங்களில் காங்கிரஸ் அரசு புதிய சட்டத் திருத்தத்தை முன்மொழிந்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி இல்லாமல் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அதில் இருந்து தப்ப வாய்ப்பளிப்பதாக இருந்தது.

முட்டாள்தனம்
காங்கிரஸ் அரசே இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருந்தாலும் ராகுல் காந்தி இதை வெளிப்படையாகவே எதிர்த்தார். 2013 செப். 8ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, காங். கொண்டு வந்த சட்டத் திருத்தத்தையே வெளிப்படையாக எதிர்த்தார். அப்போது பேசிய ராகுல் காந்தி, "தனிப்பட்ட முறையில் அரசு செய்வது தவறு என்று நினைக்கிறேன். இது ஒரு அரசியல் முடிவு, ஒவ்வொரு கட்சியும் சில நேரங்களில் இப்படிச் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், இது முட்டாள்தனமான முடிவு, இந்த முட்டாள் தனத்தை நிறுத்த நமக்கு இன்னும் நேரம் இருக்கிறது.

கிழித்தெறிந்த ராகுல்
உண்மையாகவே ஊழலை நிறுத்த விரும்பினால், இந்த சட்டத்திருத்தங்களை ஏற்க முடியாது. இந்த சட்ட திருத்தத்தைக் கிழித்துத் தூக்கி எறிய வேண்டும்" என்றார். அதேபோல எதிர்ப்பின் அடையாளமாக ராகுல் காந்தி, அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவசரச் சட்ட நகலைக் கிழித்தெறிந்தார். அப்போது காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தியின் இந்த செயல் அப்போதே பேசுபொருளானது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியும் இந்த சட்ட திருதத்தை வாபஸ் பெற்றது.

எதிராக மாறியது
இது நடந்து ஓராண்டிற்குள் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக வென்று பிரதமர் மோடி ஆட்சியை அமைத்தார். இப்போது 10 ஆண்டுகள் கழித்து ராகுல் காந்தி எந்தச் சட்டத் திருத்த நகலைக் கிழித்து எறிந்தாரோ.. இப்போது அதே காரணமாக ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தி தனது 43 வயதில் செய்த காரியம், இப்போது அவருக்கு எதிராக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications