"100 மடங்கு குறைந்த செலவு.!" ஒரே ஆண்டில் பல அரிய நோய்களுக்கு மருந்து! சாதித்து காட்டிய இந்தியா! வாவ்
டெல்லி: பல அரிய மற்றும் அதிக செலவாகும் நோய் பாதிப்புகளுக்குக் குறைந்த விலையில் மருந்துகளை உருவாக்கி இந்திய மருந்து நிறுவனங்கள் மகத்தான ஒரு சாதனையைப் படைத்துள்ளன.
உலகிற்குத் தேவையான பெருமளவு மருந்துகள் இந்தியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல மருந்து நிறுவனங்கள் சர்வதேச அளவில் முக்கிய நிறுவனங்களாக இருந்து வந்துள்ளன.

இதற்கிடையே மத்திய அரசின் உதவியுடன், இந்திய மருந்து நிறுவனங்கள் ஒரே ஆண்டில் நான்கு அரிய நோய்களுக்கான மருந்துகளை உருவாக்கியுள்ளன.
100 மடங்கு குறையும்: இதன் மூலம் இந்த நோய்களின் சிகிச்சைச் செலவு 100 மடங்கு வரை குறைந்துள்ளன. இதில் பல நோய்கள் மரபணு காரணங்களால் ஏற்படுவதாகவும் இதில் பாதிக்கப்படுவோரில் பலர் குழந்தைகளாக இருக்கும் நிலையில், இந்த மருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
உதாரணமாக, டைரோசினீமியா டைப் 1 நோயால் பாதிக்கப்படுவோர் சிகிச்சை பெற ஆண்டுக்கு ₹ 2.2 கோடி முதல் ₹ 6.5 கோடி வரை செலவாகும். இப்போது இந்திய மருந்து நிறுவனங்கள் உருவாக்கிய மருந்துகளால் ஆண்டிற்கான சிகிச்சை செலவு ₹ 2.5 லட்சமாகக் குறைந்துள்ளது. இந்த நோய்ப் பாதிப்பிற்கு உரியச் சிகிச்சை தரவில்லை என்றால் ஒரு குழந்தை 10 வயதிற்குள் நோயால் உயிரிழந்துவிடும். இந்த நோய்க்கு நிடிசினோன் என்ற மருந்து மூலம் சிகிச்சை தரப்படும்.
பல நோய்ப் பாதிப்பு: இது தவிர வேறு சில நோய்ப் பாதிப்புகளுக்கும் இந்திய நிறுவனங்களை மருந்துகளை உருவாக்கியுள்ளனர். முதலில் கவுச்சர் நோய் ( Gaucher's Disease). இந்த பாதிப்பால் கல்லீரல் அல்லது மண்ணீரல் வீங்கிப் போகும். மேலும், எலும்பு வலி மற்றும் அதீத சோர்வை ஏற்படுத்தும் வில்சன் நோய்ப் பாதிப்பு.
கல்லீரலில் தாமிர படிவது மற்றும் மன ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும் வில்சன் பாதிப்பு. சிக்கலான வலிப்பு நோயை ஏற்படுத்தும் டிராவெட்/லெனாக்ஸ் காஸ்டாட் சிண்ட்ரோமிற்கும் சிகிச்சை கண்டறியப்பட்டுள்ளது.
செலவு குறையும்: இதில் கவுச்சர் நோய்ப் பாதிப்பிற்கு எலிகுலஸ்டாட் காப்ஸ்யூல்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நோய்க்கு ஆண்டுக்கு ₹ 1.8-3.6 கோடி செலவான நிலையில், இப்போது அது ரூ. 3.6 லட்சமாகக் குறைகிறது. அதேபோல வில்சன் நோய்க்கு ட்ரையன்டைன் காப்ஸ்யூல் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், அதற்கு ஆண்டுக்கு ரூ. 2.2 கோடி செலவான நிலையில், அது ரூ.2.2 லட்சமாகக் குறையும். டிராவெட் நோய்ப் பாதிப்பிற்கான சிகிச்சை ரூ.7லட்சத்தில் இருந்து ஒரு லட்சமாகக் குறைகிறது.
இந்தியாவில் மட்டும் சுமார் 8.4 கோடி முதல் 10 கோடி பேர் இந்திய அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 80% நோய் பாதிப்பு மரபியல் சார்ந்தவையாக இருக்கிறது. இதனால் அதன் அறிகுறிகளை நாம் எவ்வளவு சீக்கிரம் கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறோமோ அந்தளவுக்கு நல்லது.
மத்திய அரசு: கடந்தாண்டு இந்தியாவில் உள்ள பல்வேறு மருந்து நிறுவனங்கள் 13 வகையான அரிய நோய்களுக்கான மருந்துகளைத் தயாரிக்கத் தொடங்கின. அதற்கு மத்திய அரசின் உதவியும் இருந்தது. இப்போது ஒரே ஆண்டில் நான்கு நோய்களுக்கான மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், மற்ற நோய்களுக்கான மருந்துகள் விரைவில் கிடைக்கும் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள்.
குறிப்பாக ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி என்ற நோய்ப் பாதிப்பு இருந்தால் அந்த சிகிச்சைக்கு பிரத்தியேக ஊசியைச் செலுத்த வேண்டும். அதற்கு ஒரு முறைக்கே ரூ. 16 கோடி செலவாகும். இதற்குக் குறைந்த விலையில் மருந்தை உருவாக்கவும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications