நாயுடுவுக்கு மட்டும் 20 நிமிடமா? நிதி ஆயோக்கால் சீறிய மம்தா! வெளிநடப்பு செய்தது ஏன்? என விளக்கம்
டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்ற நிலையில் அவர் பாதியில் வெளிநடப்பு செய்தார். இந்த நிலையில் தான் நிதி ஆயோக்கில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? என்பது பற்றி மம்தா பானர்ஜி ஆக்ரோஷமாக விளக்கி உள்ளார். அதுமட்டுமின்றி பாஜக கூட்டணியின் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச மட்டும் 20 நிமிடம் வழங்கிவிட்டு தனக்கு வெறும் 5 நிமிடமா? என கோபத்தை வெளிக்காட்டியுள்ளார்.
மத்திய திட்ட கமிஷனுக்கு பதில் மத்திய அரசு ‛நிதி ஆயோக்' அமைப்பை உருவாக்கி உள்ளது. இதன் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். இந்நிலையில் தான் நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் இன்று நடந்து வருகிறது. இதில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் தான் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக ‛இந்தியா' கூட்டணி கட்சிகளை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்தனர். அதன்படி தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கா்நாடக முதல்வர் சித்தராமையா, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டவர்கள் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
மத்திய பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களுக்கு மட்டும் அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. மற்ற மாநிலங்கள் புறக்கணிப்பட்டதாக கூறி அவர்கள் கூட்டத்தில் பங்கேற்க போவது இல்லை என புறக்கணிப்புக்கான காரணமாக அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியபோது அவரது மைக் ஆப் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வெளிநடப்பு செய்தது ஏன்? நிதி ஆயோக்கில் மத்திய அரசு எப்படி பாரபட்சம் காட்டியது? என்பது பற்றி மம்தா பானர்ஜி விளக்கி உள்ளார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‛‛நிதி ஆயோக் கூட்டத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டியது. இதனால் வெளிநடப்பு செய்துள்ளேன். பாஜக மற்றும் பாஜக கூட்டணி முதல்வர்கள் 10 முதல் 20 நிமிடம் வரை பேசினார்கள். சந்திரபாபு நாயுடு (ஆந்திர முதல்வர்) 20 நிமிடங்கள் வரை பேசினார். அசாம், கோவா, சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் 10 முதல் 12 நிமிடங்கள் வரை பேசினார்கள். அவர்களுக்கு வாய்ப்பளித்த மத்திய அரசு எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதலமைச்சர்களில் நான் மட்டுமே பங்கேற்றேன். ஆனாலும் நிதி ஆயோக் கூட்டத்தில் என்னிடம் பாரபட்சம் காட்டினார்கள். வெறும் 5 நிமிடம் மட்டும் எனக்கு பேச வாய்ப்பளித்தனர். 5 நிமிடத்துக்கு மேல் பேசியபோது மைக்கை ஆஃப் செய்தனர்.
இதனால் எதுக்கு என்னை தடுக்கிறீர்கள்? ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். நான் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறேன் என்றால் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அதற்கு பதிலாக உங்கள் கட்சியின் முதல்வர்கள், கூட்டணியில் உள்ள முதல்வர்களுக்கு அதிக வாய்ப்பை வழங்கி என்னை புறக்கணிக்க கூடாது. இது மேற்கு வங்க மாநிலம் மட்டுமின்றி அனைத்து மாநில கட்சிகளையும் அவமதிக்கும் செயலாகும். இது நியாமற்றது என்று கூறினேன்.
எதிர்க்கட்சிகள் சார்பில் நான் மட்டுமே முதல்வராக பங்கேற்றேன். இதற்கு காரணம் கூட்டாச்சி முறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பது தான். ஆனால் பட்ஜெட்டில் அரசியல் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிற மாநிலங்கள் மீது ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினேன். மேலும் நிதி ஆயோக்கிற்கு நிதி சார்ந்த அதிகாரம் இல்லை. பிறகு எப்படி இது இயங்கும்? நிதி ஆயோக்கிற்கு நிதி அதிகாரத்தை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் பழைய திட்ட கமிஷனையே மீண்டும் கொண்டு வர வேண்டும் '' என சீறினார்.












Click it and Unblock the Notifications