எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம்.. இரண்டே வரியில் ராகுல் காந்தி ட்விட்.. என்ன சொன்னார் தெரியுமா?
டெல்லி: அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தியின் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லோக்சபா செயலகம் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தது. எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு ராகுல் காந்தி தனது ட்விட் பதிவில், நாட்டுக்காக எந்த விலையையும் கொடுக்க தயார் என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசியது பெரும் சர்ச்சையானது.
மோடி பெயர் குறித்து விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக அமைந்து விட்டதாக கூறி குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நீதிமன்றத்தில் குஜராத் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

2 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த வழக்கின் விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த வழக்கின் தீர்ப்புக்காக ராகுல் காந்தியும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியிருந்தார். ராகுல் காந்தி இந்த வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளித்த சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இருப்பினும் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கி 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்தது.

எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம்
ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது எம்.பி பதவி பறிபோகக்கூடும் என்று தகவல் வெளியாகி வந்த நிலையில், ராகுல் காந்தி எம்.பி பதவி நீக்கம் செய்யப்படுவதாக லோக்சபா செயலகம் அறிவித்தது. ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலாளர் உத்பல் குமார் சிங் அறிவித்து உள்ளார். இதில் நாடாளுமன்ற இணை செயலாளர் பிசி திரிபாதி கையெழுத்து இட்டுள்ளார்.

சட்டப்பிரிவு 8 இன் கீழ்
லோக்சபா செயலகம் வெளியிட்டுள்ள உத்தரவில், "மார்ச் 23 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை தொடர்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 102(1)(e) மற்றும் 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 இன் கீழ் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

இரண்டே வரியில் பதில்
மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் ஜனநாயக படுகொலை என்றும் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் அவர் எம்.பி பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தனது எம்.பி பதவி பறிக்கப்பட்ட பிறகு ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் குரலுக்காக நான் போராடிக்கொண்டு இருக்கிறேன். நாட்டிற்காக எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications