வலுவாகும் இந்தியா - அமெரிக்கா உறவு? மோடியை சந்தித்து பேசிய புதிய தூதர்.. என்ன நடந்தது தெரியுமா?
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்தால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நம் நாட்டுக்கான அமெரிக்காவின் புதிய தூதர் செர்ஜியோ கோரை டிரம்ப் டெல்லிக்கு அனுப்பி வைத்தார். இன்று அவர் பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேசிய நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவுக்கும், நம் நாட்டுக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் காரணம். டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்தார். இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது.

அமெரிக்காவால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய நம் நாடு சீனாவுடன் கைகோர்த்துள்ளது. இது டிரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து டிரம்ப் நம் நாட்டை விமர்சிப்பதை கைவிட்டு அரவணைக்க தொடங்கி உள்ளார். இதற்கிடையே நம் நாட்டுக்கான அமெரிக்காவின் தூதராக டிரம்ப் தனது நெருங்கிய ஆதரவாளரான செர்ஜியோ கோரை நியமித்தார்.
செர்ஜியோ கோர், அமெரிக்க மேலாண்மை பிரிவின் துணை செயலாளர் மைக்கேல் ஜே ரிகாஸ் உடன் 6 நாள் பயணமாக இந்தியா வந்தார். இன்று டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதித்தார்.
இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் உள்ள நிலையில் இந்த சந்திப்பு - பேச்சுவார்த்தை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு செர்ஜியோ கோர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவுக்கான அமெரிக்கா தூதராக இன்று இங்கு நிற்பதை ஒரு மரியாதை மற்றும் பாக்கியமாக கருதுகிறேன். வெளியுறவுத்துறை செயலாளர் மிஸ்ரி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தேவால் உள்ளிட்ட பலருடன் நாங்கள் சந்திப்பை நடத்தினோம். பிரதமர் மோடியுடனா சந்திப்பு அற்புதமாக அமைந்தது.
இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு துறை, வர்த்தகம் மற்றும் தொில்நுட்பம் சார்ந்த இருதரப்பு விவகார்ஙகள் பற்றி விவாதித்தோம். முக்கியமாக கணனிங்களின் முக்கியத்துவம் பற்றி ஆலோசித்தோம். இந்தியா உடனான உறவை எப்போதும் அமெரிக்கா மதித்து வருகிறது. டிரம்ப் - மோடி என்ற வலுவான இருதலைமையின் கீழ் அமெரிக்கா - இந்தியாவின் எதிர்காலம் நம்பிக்கையுடன் இருக்கும் என்று நம்புகிறேன்.
பிரதமர் மோடியை, டொனால்ட் டிரம்ப் தனிப்பட்ட முறையில் நண்பராக கருதி வருகிறார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் டெல்லி புறப்படுவதற்கு முன்பு அவர்கள் இருவரும் தொலைபேசியில் பேசினார்கள். இதுபோன்ற செயல்கள் வரும் வாரம், மாதங்களில் தொடர்ந்து நடக்கும். டொனால்ட் டிரம்ப் தலைமையில் இந்தியாவுக்கான தூதராக செயல்படுவதை மரியாதையாக கருதுகிறேன். அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவை தொடர்ந்து வளர்த்து ஆழப்படுத்துவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications