தகுதி நீக்கம்.. 2+6 ராகுல் இதை செய்யாவிட்டால் 8 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாதாமே..கலங்கும் ‛கை’
டெல்லி: சூரத் நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனையால் ராகுல் காந்தி இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலை நீடிக்கும் பட்சத்தில் ராகுல் காந்தியால் தனது தண்டனை காலமான 2 ஆண்டு மற்றும் அதன்பிறகான அடுத்த 6 ஆண்டு என மொத்தம் 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தகவல் வெளியாகி உள்ளதால் காங்கிரஸ் கட்சி கலக்கத்தில் உள்ளது. மேலும் சட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் கர்நாடகா மாநிலம் கோலாரில் மோடி பெயர் குறித்து விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசியிருந்தார். இது சர்ச்சையானது.
இதையடுத்து ராகுல் காந்தி மீது குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நீதிமன்றத்தில் குஜராத் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

2 ஆண்டு சிறை தண்டனை
இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ராகுல் காந்தி நேரில் ஆஜரான நிலையில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மேலும் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கி 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்தது.

தகுதி நீக்க நடவடிக்கை
இந்த தண்டனை காரணமாக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகின. இந்நிலையில் தான் இன்று ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது காங்கிரஸ் கட்சியினருக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் நேரம் வழங்கிய நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் சட்ட விதிகளுக்கு உட்பட்டே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக லோக்சபா செயலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 ஆண்டு போட்டியிட முடியாதாமே
இந்நிலையில் தான் 2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட இருந்தார். ஆனால் தற்போதைய தகுதி நீக்க நடவடிக்கை என்பது காங்கிரஸ் கட்சிக்கும், ராகுல் காந்திக்கும் பெரிய பின்னடைவை வழங்கி உள்ளது. அதாவது குற்றம் மற்றும் அவதூறு வழக்கில் 2 அல்லது அதற்கு கூடுதலான ஆண்டுகளில் தண்டனைக்கு உள்ளாகும் மக்கள் பிரதிநிதிகள் தண்டனை காலத்துக்கு பிறகு அடுத்த 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது என சட்டம் உள்ளது. அதன்படி பார்த்தால் தண்டனை காலமான 2 ஆண்டு மற்றும் அதன்பிறகான 6 ஆண்டு என மொத்தம் 8 ஆண்டுகள் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உள்ளது.

ராகுலுக்கு இருக்கும் வாய்ப்பு என்ன?
இதனால் தற்போது 2 ஆண்டு சிறை தண்டனை பெற்று தகுதி நீக்க நடவடிக்கைக்கு உள்ளாகி உள்ள ராகுல் காந்தியால் 6 ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகி உள்ளது என அரசியல் விமர்சகள் தெரிவித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன்படி சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உடனடியாக ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்படுவதோடு, தீர்ப்புக்கு தடை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது நடக்காவிட்டால் ராகுல் காந்தியால் அடுத்த 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications