சீறிய சிங்கப்பெண்கள்.. யுபிஎஸ்சி தேர்வில் டாப் 4ல் ஒரு ஆணும் இல்லை! முடிவுகளை பார்ப்பது எப்படி?
டெல்லி: இந்திய குடிமைப் பணிகளுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் தேசிய அளவிலான தரவரிசையில் முதல் 4 இடங்களையும் பெண்களே பிடித்து அசத்தி இருக்கிறார்கள். இந்த தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி? மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்? விரிவாக அலசுவோம்.
மத்திய அரசு பணிகளில் உயரிய பதிவிகளாக ஐஏஎஸ், ஐ.எஃப்.எஸ். மற்றும் ஐபிஎஸ் பதவிகள் உள்ளன. அரசு நிர்வாகத் துறையில் ஐஏஎஸும், காவல்துறையில் ஐபிஎஸும், வெளியுறவுத் துறை ஐ.எஃப்.எஸுமே உயரிய பதவிகளை அலங்கரிப்பார்கள். ஆனால், இந்த பதவிகளை அடைய யுபிஎஸ்சி எனப்படும் இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும்.

ஆண்டுதோறும் ஒருமுறை நடத்தப்படும் இந்த யுபிஎஸ்சி தேர்வில் முதல் நிலை தேர்வுகள், முதன்மை தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் என்ற 3 படிநிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உட்பட 1022 காலி பணியிடங்களுக்காக முதல் நிலை யுபிஎஸ்சி தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.
இந்த நிலையில், யுபிஎஸ்சியின் முதல் 2 தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதித் தேர்வான நேர்முகத் தேர்வு தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில் இந்த மே மாதம் யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வுகள் நடந்து முடிந்தன. அதை தொடர்ந்து இன்று யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு iஇருக்கும் தேர்வு முடிவுகளின்படி 933 பேர் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இதில் தேசிய அளவில் முதல் 4 இடங்களையும் பெண்களே பிடித்து இருக்கிறார்கள் என யுபிஎஸ்சி தெரிவித்து இருக்கிறது. முதலிடத்தை இஷிதா கிஷோர் என்ற டெல்லி மாணவி பிடித்து இருக்கிறார். 2 வது இடத்தை டெல்லியை சேர்ந்த கரிமா லோஹியா என்ற மாணவி பிடித்து உல்ளார்.
3 வது இடத்தை ஐதராபாத் ஐஐடி மாணவி உமா ஹராதி என்பவரும், 4வது இடத்தை ஸ்மிருதி மிஸ்ரா என்ற டெல்லியை சேர்ந்த மாணவியும் பெற்று உள்ளனர். ஆண்களிலேயே முதலிடத்தையும் மொத்த தரிவரிசையில் 5 வது இடத்தையும் மயுர் ஹசாரிகாவும், 6 வது இடத்தில் கஹானா நவ்யா ஜேம்ஸ் என்ற பெண்ணும், 7 வது இடத்தில் வசீம் அஹமது பட் என்ற மாணவரும், 8 வது இடத்தில் அனிருத் யாதவ், 8 வது இடத்தில் கனிகா கோயல், 10 வது இடத்தில் ராகுல் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் பிடித்து இருக்கிறார்கள்.

இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 39 பேர் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். தேர்ச்சி அடைந்த 933 பேரில் 345 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 99 பேர் பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய உயர்சாதியினர், 263 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர், 154 பேர் பட்டியலினத்தவர்கள், 72 பேர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் என்று யுபிஎஸ்சி தெரிவித்து இருக்கிறது.
யுபிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் upsc.gov.in என்ற இணையதளத்துக்கு சென்றால் முதல் பக்கத்திலேயே ரிசல்ட் பார்ப்பதற்கான ஆப்ஷன் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். அதை கிளிக் செய்தால், 3 வது பக்கத்தில் இருந்து யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் பெயர் மற்றும் ரோல் நம்பர் ரேங்க் வரிசைப்படி வரும். ஒவ்வொருவரின் தனிப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் இன்னும் 15 நாட்களுக்குள் யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications