அதிர்ச்சி புள்ளி விவரம்! 2021ல் அதிகரித்த தற்கொலைகள்.. லிஸ்டில் மாணவர்கள்தான் அதிகமாம்.. NCRB தகவல்
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 2021ல் தற்கொலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
இம்மாதிரியான தற்கொலைகளில் மாணவர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர்கள்தான் அதிக அளவில் ஈடுபடுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல 2021ம் ஆண்டில் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலைகள்
சமீப நாட்களாக சினிமா பிரபலங்கள் தொடங்கி சாமானிய மக்கள் வரை தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் செய்திகளில் அதிகம் காண முடிகிறது. ஆனால் இது சாதாரண செய்தி மட்டுமல்ல. ஒவ்வொரு தற்கொலைகளும் இந்த சமூகத்தின் தோல்வியாகதான் பார்க்கப்பட வேண்டும். இந்த சமூகத்தின் அங்கமாக இருக்கின்ற ஒவ்வொரு மனிதர்களின் தோல்வியாகதான் பார்க்க வேண்டும். அந்த வகையில் மத்திய அரசு தற்கொலைகள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டை விட அதிகரிப்பு
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB)தெரிவித்துள்ளது. எந்த அளவு எனில் கடந்த 2020ம் ஆண்டை விட 2021ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7.2 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. தற்கொலைகள் மட்டுமல்லாது குற்றங்கள் மற்றும் விபத்து மரணங்களின் எண்ணிக்கை கொரோனா காலத்திற்கு முந்தைய நிலையை போல இயல்பை எட்டியுள்ளது என NCRB தெரிவித்துள்ளது.

10 லட்சத்தில் 120 பேர்
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுத்தியுள்ள மன அழுத்த தாக்கத்தின் பிரதிபலிப்புதான் தற்கொலை உயிரிழப்புகள் அதிகரித்ததற்கான காரணமாக தெரிந்துகொள்ள முடிகிறது. NCRB அறிக்கையின்படி 2021ம் ஆண்டில் மொத்தம் 1,64,033 பேர் தற்கொலையால் உயிரிழந்துள்ளனர். அதே அதற்கு முந்தைய ஆண்டில் (2020) 1,53,052 பேரும், 2019ல் 1,39,000 பேரும் தற்கொலையால் உயிரிழந்துள்ளனர். அதாவது சராசரியாக 10 லட்சம் மக்களில் 120 பேர் தற்கொலையால் உயிரிழக்கின்றனர்.

விளிம்புநிலை மக்கள்
1967ம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 2021ல்தான் அதிக அளவில் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதற்கு முன்னர் கடந்த 2010ல் இதுபோல அதிக அளவில் தற்கொலைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அப்போதைய நிலவரப்படி சராசரியாக 10 லட்சம் மக்களில் 113.5 பேர் தற்கொலையால் உயிரிழந்திருந்தனர். 2021ம் ஆண்டு நிலவரப்படி தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தவர்களில் மூன்றில் இரண்டு சதவிகிதம் பேர் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்திற்கும் குறைவான வருமானம் ஈட்டுபவர்கள் என்பது கவனத்திற்குறியதாகும்.

மாணவர்கள் மற்றும் விவசாயிகள்
அதேபோல சிறு தொழில்முனைவோர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் தினக்கூலி வேலை செய்பவர்களும் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்துகொள்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து மாணவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கின்றனர். மாத சம்பளம் பெறுபவர்கள் தற்கொலை செய்துகொள்வதைவிட மாணவர்களே அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதேபோல விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களிடையேயும் தற்கொலைகள் அதிகரித்துள்ளன.
விபத்துகளில் உயிரிழந்தவர்களை பொறுத்த அளவில் கடந்த 2020ல் 3,74,000 பேரும், 2021ல் 3,97,000 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தி என்னவெனில், இயற்கை பேரிடர் மரணங்கள் 2020ல் பதிவானதைவிட 2021ல் குறைவாகவே பதிவாகியுள்ளது. அதேபோல குற்ற எண்ணிக்கையின் அளவுகளும் கடந்த ஆண்டு குறைந்துள்ளதாக NCRB அறிக்கை கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications