நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர்.. முக்கிய விவகாரங்களை எழுப்பும் இந்தியா கூட்டணி! இன்று ஆலோசனை
டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டத் தொடரின் அனைத்து அலுவல்களிலும் பங்கேற்பது என்றும், மக்கள் பிரச்னைகளை எழுப்புவது எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஜி20 நாடுகளின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த கையோடு தற்போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை மத்திய அரசு நடத்த இருக்கிறது. இன்று தொடங்கி வரும் 22ம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத் தொடரின் முதல்நாள் நிகழ்வு பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும், இரண்டாம் நாள் முதல் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வு வரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறுகிறது. முன்னதாக இந்த கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன.

இதனையடுத்து அரசியல் நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுக்கால பயணம் வரை இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்றும், வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, அஞ்சல் அலுவல் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு கூறியது. அதேபோல ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டமும் இந்த கூட்டத் தொடரில் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருப்பினும், புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத் தொடரை தங்களுக்கான கிரிட்டிட்டாக மாற்றிக்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இந்தியாவின் மூவர்ண கொடி நிலவிலும் பறக்கிறது என்றும் கூறினார். மேலும், "இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க வேண்டும். சில நாட்கள் மட்டும் நடந்தாலும் சிறப்பு கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகளை எடுக்கப்பட உள்ளது. எதிர்வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும்" என்று கூறினார்.
முன்னதாக இந்த கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே தலைமையில், டெல்லியில் அவரது அலுவலகத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் அனைத்து அலுவல்களிலும் பங்கேற்பது என எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. அதேபோல மக்கள் பிரச்னைகளை இந்த சிறப்பு கூட்டத்தொடரில் எழுப்பவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications