நாடாளுமன்றம் மீண்டும் நாளை கூடுகிறது! நீட், அக்னிபாத் புயலை கிளப்ப "இந்தியா" கூட்டணி "வெயிட்டிங்"!
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு சபைகளும் மீண்டும் நாளை கூடுகின்றன. நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நீட் வினாத்தாள் விற்பனை முறைகேடு, அக்னிபாத் திட்டத்தை கைவிட கோருதல், வேலைவாய்ப்பின்மைக்கு தீர்வு காண வேண்டும் ஆகியவற்றை முன்வைத்து "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் தொடர்ந்து புயலைக் கிளப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும் மத்திய விசாரணை ஏஜென்சிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் கடந்த 24-ந் தேதி தொடங்கியது. முதல் 2 நாட்கள் புதிய எம்பிக்கள் பதவியேற்றனர். இதனையடுத்து ஜூன் 26-ந் தேதி லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா வெற்றி பெற்றார். சபாநாயகர் இருக்கையில் ஓம் பிர்லாவை பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜூன் 27-ந் தேதி ராஜ்யசபா கூட்டம் தொடங்கியது. அன்றைய நாளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு லோக்சபா, ராஜ்யசபா கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது.
லோக்சபாவில் புதிய எம்பிக்கள் பதவியேற்ற நாளில் இருந்தே நீட் தேர்வு முறைகேடு விவகாரம் எழுப்பப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியேற்ற போதும் நீட் தேர்வுக்கு எதிரான முழக்கங்களை இந்தியா கூட்டணி எம்பிக்கள் எழுப்பினர். அதேபோல திமுகவின் தயாநிதி மாறன் எம்பி உள்ளிட்டோர் பதவியேற்பின் போது நீட் தேர்வுக்கு எதிராக முழங்கினர்.
பின்னர் ஜனாதிபதி உரையாற்றும் போதும் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை ஒத்தி வைத்துவிட்டு நீட் முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என லோக்சபா, ராஜ்யசபாவில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் வலியுறுத்தினர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இரு சபைகளையும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் முடக்கினர்.
இருநாட்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் நாளை மீண்டும் கூடுகிறது. லோக்சபா, ராஜ்யசபாவில் நாளையும் நீட் முறைகேடு, அக்னிபாத் திட்ட எதிர்ப்பு, வேலைவாய்ப்பின்மைக்கு தீர்வு உள்ளிட்டவைகளை இந்தியா கூட்டணி எம்பிக்கள் எழுப்ப இருக்கின்றனர். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் இறுதியில் பிரதமர் மோடி ஜூலை 2 அல்லது ஜூலை 3-ல் உரையாற்ற இருக்கிறார். அப்போதும் இந்த விவகாரங்களை இந்தியா கூட்டணி எம்பிக்கள் எழுப்ப உள்ளனர்.
இதனிடையே மத்திய அரசின் விசாரணை ஏஜென்சிகளை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வலியுறுத்தியும் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாளை போராட்டம் நடத்த உள்ளனர். ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது நிகழ்வுகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications