கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக டெல்லியில் "இந்தியா" கூட்டணியின் 28 தலைவர்கள்- திருச்சி சிவா பங்கேற்பு!
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் "இந்தியா" கூட்டணியின் 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட கண்டனப் போராட்டம், பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சார்பில் திருச்சி சிவா எம்பி பங்கேற்றார்.
டெல்லி யூனியன் பிரதேச மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தை தேர்தல் ஆயுதமாக கையில் எடுத்துள்ளது எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி. கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக டெல்லியில் மிகப் பிரம்மாண்டமான பொதுக் கூட்டம், ஆர்ப்பாட்டத்துக்கு "இந்தியா" கூட்டணி ஏற்பாடு செய்தது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் மற்றும் போலீசார் அனுமதியை "இந்தியா" கூட்டணி பெற்றது..
டெல்லியில் இன்று நடைபெறும் "இந்தியா" கூட்டணி பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், இடதுசாரித் தலைவர்கள் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரனும் பங்கேற்றனர்.
திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் திருச்சி சிவா எம்பி பங்கேற்றார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஓ பிரையன், தேசிய மாநாட்டுக் கட்சியின் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெகபூபா முப்தி, ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் உள்ளிட்டோரும் இன்றைய டெல்லி பொதுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், லாலு பிரசாத் யாதவ் மீது ஏராளமான வழக்குகளை அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை தாக்கல் செய்தது. எங்கள் குடும்பம் மீதே அத்தனை வழக்குகளையும் போட்டது மத்திய அரசு. நாங்கள் சிங்கம் போல அத்தனையையும் எதிர்கொண்டு நிற்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications