கிட்டதட்ட ஜெயிலர் பட்ஜெட் தான்.. சூரியனுக்காக இஸ்ரோ போடும் ஸ்கெட்ச்.. மாஸ் காட்டும் ஆதித்யா-1 மிஷன்
டெல்லி: சந்திரயான் 3 பணிகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், இஸ்ரோ சத்தமின்றி தனது அடுத்து மிஷனில் கவனம் செலுத்தி வருகிறது. சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் ஆதித்யா எல்1 குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சந்திரயான் 3 வெற்றி என்பது இந்தியாவிற்கு மணிமகுடமாக அமைந்துள்ளது. அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், சீனாவுக்குப் பிறகு நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு என்ற சிறப்பையும் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சிறப்பையும் இந்தியா பெற்றுள்ளது.

சந்திரயான் 3 ரோவர் இப்போது நிலவில் பல்வேறு ஆய்வுப் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அடுத்து வரும் நாட்களில் நிலவு தொடர்பாகப் பல ஆய்வுகளைச் சந்திரயான் 3 மேற்கொள்ள உள்ளது. இதற்கிடையே இஸ்ரோ இப்போதே அடுத்தகட்ட மிஷனில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது.
அடுத்த மிஷன்: சந்திரயான்-3 ரோவர் ஒரு பக்கம் ஆய்வுகளை நடத்தும் நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்கள் அடுத்த இலக்கான சூரியனை நோக்கி கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். சூரிய ஆய்வுக்காக இந்தியா ஆதித்யா-எல்1 என்ற ராக்கெட்டை அனுப்புகிறது. இப்போது ஸ்ரீஹரிகோட்டா முழுவதும் இந்த அடுத்த ஸ்பேஸ் ஆய்வுக்காகவே ரெடியாகி வருகிறது. ஆதித்யா-எல்1 விண்கலம் சூரிய கரோனாவை தொலைதூரத்தில் இருந்து கண்காணிக்க உள்ளது.
மேலும், அது சூரிய வளிமண்டலத்தையும் ஆய்வு செய்யவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆதித்யா விண்கலம் சூரிய புயல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யும்.. மேலும், பூமியில் அவ்வப்போது சில பாதிப்புகளை ஏற்படுத்தும் "அரோராஸ்" குறித்தும் இது ஆய்வு செய்ய உள்ளது. நீண்ட கால நோக்கில் இதில் இருந்து நமக்குப் பல முக்கிய டேட்டாக்கள் கிடைக்கும். இது பூமியின் காலநிலையில் சூரியன் ஏற்படுத்தும் தாக்கத்தைப் புரிந்து கொள்ள உதவும்.
எப்போது ஏவப்படும்: ஆதித்யா-எல்1 மிஷனில் பயன்படுத்தப்படும் சாட்டிலைட் ரெடியாக இருக்கிறது. இது ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டாவை அடைந்துவிட்டது. அதேநேரம் ஆதித்யா-எல்1 ஏவுவதற்கான இறுதி தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் ஆதித்யா சாட்டிலைட் வானில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகச் செப்டம்பர் 2ஆம் தேதி ஆதித்யா ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதித்யா-எல்1 இஸ்ரோவின் மிகவும் வெற்றிகரமான ராக்கெட்டான பிஎஸ்எல்வி மூலம் ஏவப்படும்.. இந்த சாட்டிலைட் பூமியில் இருந்து 15 லட்சம் கிமீ வரை பயணிக்க உள்ளது. ஆதித்யா 1 ஏவப்பட்ட பிறகு, அது சூரியன் குறித்து ஆய்வு செய்ய எல் 1 எனப்படும் லாக்ரேஞ்ச் புள்ளி 1 என்ற இடத்தை சென்றடையும். அங்கே செல்ல சுமார் 125 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
இந்த இடத்தில் தான் ஈர்ப்பு விசைகள் சரியாக இருக்கும் என்பதால் இது விண்கலத்திற்கான எரிபொருள் நுகர்வைக் கணிசமாகக் குறைக்கும். இதன் காரணமாகவே ஆத்தியா ராக்கெட்டும் இங்கே நிலைநிறுத்தப்படுகிறது.
பட்ஜெட் எவ்வளவு: இஸ்ரோ விண்வெளி, நிலவு என்று தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளை வெற்றிகரமாகப் படைத்து வருகிறது. இத்தனை சாதனைகளைப் படைத்தாலும் இஸ்ரோவின் பட்ஜெட் ஒன்றும் பெரிது இல்லை. மிகக் குறைவான பட்ஜெட்டை வைத்தே அவர்கள் இந்த சாதனையைப் படைத்து வருகிறார்கள். உலகமே இன்று வியக்கும் சந்திரயான் 3 பட்ஜெட் என்பது பல ஹாலிவுட் பட்ஜெட்களை விடக் குறைவு.
நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிங்கிய முதல் நாடு என்ற பெயரை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்த சந்திரயான்-3 பட்ஜெட் வெறும் ₹ 600 கோடி தான். இது ஆதிபுருஷ், ஆர்ஆர்ஆர் ஆகிய திரைப்படங்களின் பட்ஜெட் ஆகும். இதையே தான் அவர்கள் ஆதித்யா-எல்1 திட்டத்திற்கும் பின்பற்றுகிறார்கள்.. ஆதித்யா மிஷனுக்கு சந்திரயான்-3ஐ காட்டிலும் பாதி தான் செலவழித்துள்ளார்கள்.
சூரியனின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் இந்த ஆதித்யா பணிக்காக 2019ஆம் ஆண்டில் வெறும் ₹ 378 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் பட்ஜெட் 240 கோடி எனச் சொல்லப்படுகிறது. அதைவிடக் கொஞ்ச அதிகம் மட்டுமே இஸ்ரோ தனது சூரியன் குறித்த மிஷனுக்கு செலவழித்துள்ளனர். இறுதியாக இதுவரை ஒட்டுமொத்தமாக எவ்வளவு செலவாகியுள்ளது என்பது குறித்த தகவல்களை இஸ்ரோ பகிரவில்லை. இருப்பினும், ரொம்ப பெரிதாகச் செலவு ஆகியிருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications