இந்தியாவை மிரட்டும் டிரம்ப்! ரூ.1.97 லட்சம் கோடி அமெரிக்க பொருளுக்கு வரியை குறைக்கும் மத்திய அரசு
டெல்லி: கனடா, மெக்சிகோ, சீனாவை தொடர்ந்து நம் நாட்டுக்கு ஏப்ரல் 2ம் தேதி வரி விதிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டி உள்ளார். இந்த வரியை அமெரிக்கா விதிக்கும்போது நம் நாட்டில் இருந்து அங்கு ஏற்றுமதி செய்யப்படும் வர்த்தகம் என்பது பெரும் பாதிப்பை சந்திக்கும். இதனால் அமெரிக்காவுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. இப்படியான சூழலில் தான் அமெரிக்காவில் இருந்து நம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் ரூ.1.97 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களுக்கு வரியை குறைக்க மத்திய அரசு குறைக்க முடிவு செய்து வெள்ளைக்கொடி காட்ட முடிவு செய்துள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வரி விதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் முதற்கட்டமாக அண்டை நாடான கனடா, மெக்சிகோவுக்கு அவர் கூடுதல் வரிகளை விதித்துள்ளார். அதேபோல் உலகளவில் போட்டி நாடாக உள்ள சீனாவுக்கும் டொனால்ட் டிரம்ப் அதிகமாக வரி விதித்துள்ளார்.

இதற்கு பதிலடியாக அந்த நாடுகளும் அமெரிக்காவின் பொருட்களுக்கு வரிகளை விதிக்க தொடங்கி உள்ளன. அதுமட்டுமின்றி அடுத்தகட்டமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஐரோப்பிய நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளார்.
அதாவது அமெரிக்காவின் பொருட்களுக்கு ஒவ்வொரு நாடுகளும் விதிக்கும் வரியின் அடிப்படையில் அதற்கு சமமான வரியை டிரம்ப் விதிப்பதாக அறிவித்துள்ளார். அதன்படி இந்தியா உள்பட தெற்காசிய நாடுகளுக்கு ஏப்ரல் 2ம் தேதி முதல் டிரம்ப் வரி விதிக்கிறார். இதனை அவர் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இப்படி கூடுதல் வரி விதிக்கும் போதும் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளும். இதனால் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை சமாளிப்பது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
ரூ.1.91 லட்சம் கோடி பொருட்கள்
அந்த வகையில் அமெரிக்காவுடன் சமாதானமாக செல்ல இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அமெரிக்காவில் இருந்து நம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி முதற்கட்டமாக அமெரிக்காவில் இருந்து நம்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் 23 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.1.91 லட்சம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு வரி குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் அமெரிக்காவில் இருந்து நம் நாடு இறக்குமதி செய்யும் மொத்த பொருட்களில் பாதிக்கு மேல் வரியை குறைக்க இந்தியா பரிசீலனை செய்து வருகிறது.
87% பொருட்களுக்கு வரி விதிக்கும் அமெரிக்கா
அதாவது ஏப்ரல் 2ம் தேதி அமெரிக்கா பதிலுக்கு பதிலாக நம் நாட்டில் இருந்து அங்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்தால் அது நம் நாட்டின் ஏற்றுமதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது இங்கிருந்து அமெரிக்கா செல்லும் 87 சதவீத ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்க வரி விதிக்கலாம்.
இதன் மொத்த மதிப்பு என்பது 66 பில்லியன் அமெரிக்க டாலராகும். இந்திய மதிப்பில் கூற வேண்டும் என்றால் நம் நாட்டில் இருந்து அமெரிக்கா செல்லும் ரூ.5.65 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதலாக வரியை விதிக்கலாம். இதனால் நம் நாடு அமெரிக்காவின் பொருட்கள் மீதான வரியை குறைக்க திட்டமிட்டுள்ளது.
இறுதி முடிவு எப்போது?
அதன்படி அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க தற்போது 5 சதவீதம் முதல் 30 சதவீதம் வரி விகிதத்துக்குள் இருக்கும் அமெரிக்க இறக்குமதி பொருட்களின் அளவில் 55 சதவீதம் வரை வரியை குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி சில முக்கிய பொருட்களுக்கு முற்றிலுமாக வரியை நீக்குவது பற்றியும் நம் நாடு ஆலோசித்து வருகிறது.
இதுபற்றி இன்னும் மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை. தற்போது தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்கா வர்த்தக பிரதிநிதி பிரண்டன் லிஞ்ச் நம் நாட்டுக்கு இன்று வருகிறார். அவரிடம் இது தொடர்பாக மத்திய அரசு பேசி இறுதி முடிவு எடுக்க உள்ளது. இதன்மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது நடக்கும் பட்சத்தில் இந்தியாவில் ஒரே ஆண்டில் குறைக்கப்பட்ட அதிக வரியாக இது அமையும்.
எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைப்பு
இருப்பினும் தற்போதைய தகவலின்படி அமெரிக்காவில் இருந்து நம்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பாதாம், பிஸ்தா, ஓட்ஸ், குயினோவா உள்ளிட்டவற்றின் மீதான வரிகளை குறைக்க இந்தியா தயாராக உள்ளது. இருப்பினும் இறைச்சி, சோளம், கோதுமை மற்றும் பால் பொருட்கள் மீதான வரிகளைக் குறைக்க நம் நாடு தயாராக இல்லை.
இப்படியான சூழலில் தான் நம் நாட்டின் முடிவுக்கு டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொள்வாரா? மத்திய அரசின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டு நம் நாட்டுக்கு அதிக வரி விதிப்பதில் இருந்து விலக்கு தருவாரா? என்ற பெரிய கேள்வி என்பது எழுந்துள்ளது.
வர்த்தக பற்றாக்குறை எவ்வளவு?
முன்னதாக அமெரிக்கா - இந்தியா இடையே நீண்டகாலமாக வர்த்தகம் என்பது நடந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் இருந்து இந்தியா அதிக பொருட்களை வாங்குவதை விட நம் நாட்டிடம் இருந்து தான் அமெரிக்கா அதிக பொருட்களை வாங்குகிறது. இதனால் நம் நாட்டின் ஏற்றுமதி சந்தையில் அமெரிக்கா முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியா, அமெரிக்கா இடையே மிகப்பெரிய அளவில் வர்த்தகம் நடக்கிறது. கடந்த 2023-2024 நிதி ஆண்டில் மட்டும் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்து இருக்கிறது.
மேலும் உலக வர்த்தக அமைப்பு (World Trade Organisation) டேட்டாவின்படி அமெரிக்கா இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க வரி விதிப்பு என்பது 2.2 சதவீதமாக உள்ள நிலையில் அமெரிக்கா பொருட்களின் மீதான இந்திய வரி விதிப்பு 12 சதவீதமாக உள்ளது. அதோடு இந்தியா - அமெரிக்கா இடையே 45.6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தக பற்றாக்குறை உள்ளது. அதாவது அமெரிக்கா - இந்திய வர்த்தகத்தில் நம் நாட்டை விட அமெரிக்கா ரூ.3.90 லட்சம் கோடிக்கு குறைவாக வர்த்தகம் செய்கிறது.
டிரம்ப் வரி விதிப்பது ஏன்?
இது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. அமெரிக்காவை வைத்து இந்திய ஏற்றுமதியாளர்கள் சம்பாதிக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் இருந்து அங்கு விற்கப்படும் பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்து இந்தியா சம்பாதிக்கிறது என்று டிரம்ப் நினைக்கிறார். இதுதான் டிரம்புக்கு உறுத்துகிறது. இதனால் தான் அமெரிக்காவிடம் இருந்து ராணுவ தளவாடங்களை இந்தியா வாங்க வேண்டும். இந்தியா ராணுவ தளவாடங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க கூடாது என்று தொடர்ந்து அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.
இதன்மூலம் நம் நாட்டுடன் உள்ள வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அமெரிக்கா காய் நகர்த்துகிறது. ஆனால் அமெரிக்காவின் எஃப் 35 ரக போர் விமானங்கள் உள்பட பிற ராணுவ தளவாடங்களை வாங்குவது பற்றி நம் நாடு இன்னும் அமெரிக்காவுக்கு பிடி கொடுக்கவில்லை. இதனால் தான் முதற்கட்டமாக கூடுதல் வரிகளை விதிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications