இந்தியா ஒன்றும் சத்திரம் கிடையாது.. இலங்கை தமிழரை வேறு நாட்டுக்கு போக கூறிய உச்சநீதிமன்றம்! பின்னணி
டெல்லி: தன்னை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்த தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இலங்கை தமிழர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் ‛‛உலகம் முழுவதும் இருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? ஏற்கனவே 140 கோடி மக்கள்தொகையுடன் நாம் போராடி வருகிறோம். இதனால் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க இந்தியா ஒன்றும் சத்திரம் கிடையாது. வேண்டுமென்றால் வேறு நாட்டுக்கு செல்லுங்கள்'' என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக கூறியது.
அண்டை நாடான இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் ஏராளமாக உள்ளனர். குறிப்பாக இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த சமயத்தில் பலரும் கடல் மார்க்கமாக தமிழகத்துக்கு அகதிகளாக வந்தனர். அதன்பிறகு கூட இலங்கையில் நிலவிய அரசியல் சூழல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் ஏராளமான இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றனர்.

இலங்கையில் இருந்து நம்நாட்டுக்கு வந்த இலங்கை தமிழர் ஒருவர் கடந்த 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இலங்கையில் அவர் புலிகள் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்து சட்டவிரோத செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் கைதானார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. கடந்த 2018 ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் இலங்கை தமிழருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சிறை தண்டனையை எதிர்த்து இலங்கை தமிழர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்தது. தண்டனை காலம் முடிவடைந்த நிலையில் இலங்கை தமிழர் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். அதன்பிறகு நாடு கடத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. இதையடுத்து 7 ஆண்டு சிறை தண்டனையை நிறைவு செய்த அந்த இலங்கை தமிழர் ரிலீசானார்.
அதன்பிறகு அவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‛‛இலங்கையில் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனது மனைவி, குழந்தைகள் இந்தியாவில் குடியேறிவிட்டனர். சிறை தண்டனை முடிந்ததும் என்னை நாடு கடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இப்போது வரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கை என்பது தொடங்கவில்லை. இதனால் குடும்பத்துடன் என்னை இங்கே வசிக்க அனுமதிக்க வேண்டும்''என்று கூறியிருந்தார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
இந்த வழக்கை நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் திபன்கார் தத்தா மற்றும் கே வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‛‛உலகம் முழுவதும் இருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? ஏற்கெனவே நாங்கள் 140 கோடி மக்களுடன் இருந்து போராடி வாழ்ந்து வருகிறோம்.
இந்தியா, அனைத்து இடங்களிலிருந்தும் வரும் வெளிநாட்டினரை வரவேற்று மகிழ்விக்கக்கூடிய சத்திரம் அல்ல. இந்தியாவில் குடியேற உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்கு செல்லுங்கள்'' என்று கூறியதோடு, இலங்கை தமிழரின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து அவரது மனுவை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications