மூன்றாம் நபர் தலையீடு இல்லை.. இந்திய வெளியுறவு அமைச்சகம் சொன்ன மேட்டர்! டிரம்ப் அப்படி சொன்னாரே!
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம் இருதரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது என்றும், மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்கான முடிவு, மூன்றாம் தரப்பு தலையீடு இல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி பேச்சுவார்த்தையின் மூலம் எட்டப்பட்டது என இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் மோதல்
இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 3 நாட்களாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7ஆம் தேதி அதிகாலை இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. 9 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது இந்தியா.
இதையடுத்து மே 8 மற்றும் 9 தேதி இரவு நேரங்களில் பாகிஸ்தான் ஆயுதப் படைகள் இந்தியா மீது ட்ரோன்களை ஏவின. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. மேலும் பாகிஸ்தான் மீது பதிலடி தாக்குதலையும் நடத்தியது இந்தியா.
சண்டை நிறுத்தம்
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா உறுதி செய்துள்ளது. இன்று மாலை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, இன்று மாலை 5 மணி முதல் இரு நாடுகள் இடையேயான தாக்குதல் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
"பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைக்கான இயக்குநர் ஜெனரல் நமது நாட்டு டிஜிஎம்ஓ-வை இன்று மாலை 3: 35 மணிக்கு அழைத்து பேசினார். அப்போது, இன்று மாலை 5 மணி முதல் தரை, வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும், துப்பாக்கிச்சூட்டையும் நிறுத்தி கொள்வது என இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இருநாட்டு டிஜிஎம்ஓ.,க்களும் வரும் 12 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு பேசுவார்கள்." என விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
.@MEAIndia announces that stoppage of firing & military action between India and Pakistan was worked out directly between the two countries.
— Ministry of Information and Broadcasting (@MIB_India) May 10, 2025
The Pak DGMO initiated the call this afternoon after which discussions took place and understanding reached.
There is no decision to… pic.twitter.com/HrepAj12bR
டிரம்ப் சொன்னது
முன்னதாக, இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து இந்தியா பாகிஸ்தான் சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தது என்கிற ரீதியில் பதிவிட்டிருந்தார் டிரம்ப்.
"அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இரு நாடுகளும் உடனடி சண்டை நிறுத்தத்திற்கும் சமாதானத்திற்கும் ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு நாடுகளின் அறிவார்ந்த செயலுக்கு எனது பாராட்டுகள்." என்று பதிவிட்டிருந்தார் டிரம்ப்.












Click it and Unblock the Notifications