இந்தியாவில் சட்டென குறைந்த கொரோனா மரணங்கள்- நேற்று 236 பேர் உயிரிழப்பு
டெல்லி: இந்தியாவில் சனிக்கிழமையன்று கொரோனாவுக்கு 621 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 236 பேர் மட்டும் மரணம் அடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை ஓமிக்ரான் என்கிற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்கா உட்பட ஆப்பிரிக்கா நாடுகளில்தான் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.

ஓமிக்ரான் கட்டுப்பாடுகள்
ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து பிற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்களால் மெல்ல மெல்ல உலகம் முழுவதும் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் விமான சேவைகள் ரத்து, புதிய கட்டுப்பாடுகள் என நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன.

இந்தியா நிலவரம் என்ன?
இந்தியாவிலும் ஓரிருவருக்கு ஓமிக்ரான் தொற்று இருக்கலாம் என்கிற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் மரணங்கள் வெகுவாக குறைந்துள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணிந்நேரத்தில் 8,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 9,905 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,40,08,183. கடந்த ஆண்டு மார்ச்சிலிருந்து இது 98.34% அதிகமாகும்.

குறைவான ஆக்டிவ் கேஸ்கள்
இந்தியாவில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1,03,859. இது கடந்த 544 நாட்களில் மிக குறைவானதாகும். நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் இந்த ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையானது 1%க்கும் குறைவானது. தற்போதைய நிலையில் மொத்த பாதிப்பில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 0.30%. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து மிக மிக குறைவானதாகவும். நாடு முழுவதும் இதுவரை 64.02 கோடி கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்ட்ருக்கின்றன.

கொரோனா மரணங்கள் குறைவு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 236 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா மரணங்கள் மிக மிக வெகுவாக குறைந்திருப்பதையே இது காட்டுகிறது. நாட்டில் நேற்று முன்தினம் கொரோனாவால் 621 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கணிசமான அளவு கொரோனா மரணங்கள் குறைந்திருக்கின்றன. நாடு முழுவதும் இதுவர 122.41 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்கிறது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவர அறிக்கை.












Click it and Unblock the Notifications