இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி, கொரோனா காலத்தைவிட சரிவு! நிலைமை மோசம்!
டெல்லி: அதிபர் டிரம்ப்பின் வரியால் இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தகம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் சரக்குகள் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆர்டர்கள் குறைந்துள்ளதால் இந்திய வர்த்தகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் இந்தாண்டு தொடக்கம் முதலே உலக நாடுகள் மீது இஷ்டத்திற்கு வரிகளை விதித்து வந்தார். அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் இந்தியா மீதும் வரிகளை விதித்தார். இரு கட்டங்களாக மொத்தம் 50% வரி விதிக்கப்பட்டது. இந்த வரி இந்தியா அமெரிக்கா உறவுகளை மிகக் கடுமையாகப் பாதித்தது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகமும் மோசமாகச் சரிந்தது.

கடும் சரிவு
இந்த வரியால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான விமானச் சரக்குப் போக்குவரத்து ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 4,319 டன் பொருட்கள் அனுப்பப்பட்டதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அனுப்பப்பட்ட 7,152 டன்களுடன் ஒப்பிடுகையில் ரொம்பவே குறைவாகும்.
கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட 2020 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் கூட இந்தியா அமெரிக்கா இடையேயான சரக்கு சேவை பெரியளவில் குறையவில்லை. அந்த ஆண்டுகளில் கூட சுமார் 5,000 முதல் 9,000 டன்கள் வரையிலான சரக்குகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது.. ஆனால், இப்போது அதையெல்லாம் விட மோசமாகச் சரிந்துள்ளது.
9 ஆண்டுகளில் இல்லாத சரிவு
கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தகம் சரிந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில், இந்தியாவில் இருந்து 3,750 டன் சரக்கு அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகு மிக குறைந்த சரக்குகள் அனுப்பப்பட்ட ஆண்டாக 2025 இருக்கிறது.
டிரம்ப் வரியால் அமெரிக்காவில் தேவை குறைந்துள்ள நிலையில், ஆர்டர்கள் குறைந்துள்ளது. இதுவே சரக்கு சேவை சரிய முக்கிய காரணமாக இருப்பதாக வர்த்தகச் சங்க பிரதிநிதிகள் கூறுகிறார்கள். இப்போது இந்தியாவுக்கான வரியைக் குறைக்கப் போவதாக டிரம்ப் சொல்லியுள்ள நிலையில், வரி குறைக்கப்பட்ட பிறகு வர்த்தகம் மெல்லச் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புலம்பும் வர்த்தகர்கள்
முன்பு தினசரி 30 இன்ஜினியரிங் டூல்ஸ்களை அனுப்பிய பஞ்சாப்பைச் சேர்ந்த ஒரு வர்த்தகர், இப்போது 10 முதல் 12 ஆர்டர்களை மட்டுமே அனுப்புகிறார். அமெரிக்க வரியால் இந்த டூல்ஸ் விலை ஏறிவிட்ட நிலையில், அதை வெகு சிலரே வாங்க ஆர்வம் காட்டுவதாக அவர் குறிப்பிடுகிறார். இதனால் தனக்கான வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சொல்கிறார்.
இது தொடர்பாக FFFAI அமைப்பின் துணைத் தலைவர் ராஜேஷ் வர்மா கூறுகையில், "டிரம்ப் பதவியேற்றபோது, வரி விகிதங்கள் ஆரம்பத்தில் 25% அதிகரித்தன. பின்னர் அது 50% ஆக உயர்ந்து.. இதனால் முக்கிய ஏற்றுமதிப் பிரிவுகளைக் கடுமையாகப் பாதித்தது. அமெரிக்காவிற்கு இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிகளில் ஒன்றான கைவினைப் பொருட்களின் ஏற்றுமதியும் கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
அது மட்டுமின்றி ரத்தினங்கள் மற்றும் நகைகள், ஜவுளிகள், ஆடைகள் மற்றும் காய்கறி, பழ வகைகள் என இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குச் செல்லும் பல்வேறு பொருட்களின் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் பாதிப்பு
ஹைதராபாத் சுங்க ஏஜெண்ட் சங்கத்தின் தலைவர் எஸ். அனில் குமார் இது தொடர்பாகக் கூறுகையில், "இப்போது மருந்துகளின் ஏற்றுமதியில் எந்தவொரு பாதிப்பும் இல்லை. ஏனென்றால் அமெரிக்க வரியில் மருந்துகளுக்கு வரி விலக்கு தரப்பட்டுள்ளது. அதேநேரம் ஆடைகள், வைரங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. முன்பு $100 விலையுள்ள பொருட்களின் விலை இப்போது சுமார் $150 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஆர்டர்கள் குறைந்துள்ளன" என்றார்.












Click it and Unblock the Notifications