பாகிஸ்தான் அடாவடி! 80 மணி நேரம் ஆகியும் ராணுவ வீரரை விடுவிக்க மறுப்பு! இந்தியாவின் அடுத்த மூவ் என்ன?
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் பஹல்காம் தாக்குதலால் மேலும் மோசமடைந்துள்ளது. இந்த சூழலில் பஞ்சாப் மாநில எல்லையை தாண்டி சென்றதாக எல்லை பாதுகாப்பு படை வீரரை பாகிஸ்தானியர்கள் சிறைப்பிடித்துள்ளனர். அவர் கைதாகி 80 மணி நேரத்துக்கு மேல் ஆகியுள்ளது. இதனால் அவரை பாதுகாப்பாக மீட்க இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்தியாவுடன் இதற்கு முன்னால் மோதிய பாகிஸ்தானால், அந்த போரிலும் வெற்றி பெற முடியவில்லை. இதனால் வெறுப்படைந்துள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

பஹல்காம் தாக்குதல்
குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை வளர்த்தெடுப்பது, அவர்களுக்கு ஆதரவு வழங்குவது உள்ளிட்ட படு பாதக செயலில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானின் மறைமுக உதவியுடன் செயல்படும் இந்த பயங்கரவாத அமைப்புகள், இந்தியாவில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியா இதற்கு சரியான பதிலடி கொடுத்தாலும் கூட பாகிஸ்தானின் கொட்டம் அடங்கவில்லை.
பயங்கரவாதிகளின் சொர்க்க புரி என்று சொல்லும் அளவிற்கு பாகிஸ்தானின் செயல்பாடுகள் உள்ள நிலையில், இந்தியாவும் இதனை உலகுக்கு எடுத்துக் கூறி வருகிறது. ஆனால் இதனை பாகிஸ்தான் மறுத்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்திலும் தேவையின்றி தலையிட்டு வருகிறது. இத்தகைய நிலையில்தான், காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
பி எஸ் எஃப் வீரர் சிறைப்பிடிப்பு
இந்த தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இப்போதும் இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் அரசு மறுத்தது. பஹல்காம் தாக்குதலால் இந்தியா - பகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில்தான், பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் சர்வதேச எல்லையில் கடந்த 25 ஆம் தேதி தவறுதலாக எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் இந்திய வீரர் சென்றார்.
இதனையடுத்து அந்த வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்து சென்றனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அந்த வீரர், பிஎஸ்எப் 182வது பட்டாலியனில் கான்ஸ்டபிள் ஆக பணி புரிந்து வருகிறார். அவரது பெயர் பிகே சிங். போர் பதற்றத்திற்கு இடையே, இந்திய வீரர் பாகிஸ்தானிடம் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய வீரரை மீட்க ராணுவ உயர் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை
3 முறை கொடி அமர்வு மீட்டிங் நடைபெற்றது. ஆனாலும் இந்திய வீரரை விடுவிக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது. 80 மணி நேரத்திற்கு மேலாகியும் பாகிஸ்தான் விடுவிக்க மறுத்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீல்டு கமாண்டர் அளவிலான கொடி மீட்டிங்கிற்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சந்திப்பு விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது. பாகிஸ்தான் வசம் உள்ள இந்திய வீரரை பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக உள்துறை அமைச்சகக செயலாளரிடம் எல்லை பாதுகாப்பு படை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications