நீட் முறைகேடு: இந்திய தேர்வு முறையே மோசடி விற்பனைக்குரியதாகிவிட்டது.. லோக்சபாவில் ராகுல் காந்தி!
டெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு என்பதே மோசடியானது; நீட் தேர்வு முறைகேடுகளால் பல லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்பட்டுள்ளது; வசதி படைத்தவர்கள்தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்கிற நிலைமை உருவாகி உள்ளது; நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
18-வது லோக்சபாவின் 2-வது கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே நீட் தேர்வு மோசடிகள் விவகாரத்தை கிளப்பினார் ராகுல் காந்தி. லோக்சபாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ராகுல் காந்தி: லோக்சபாவில் பேசிய ராகுல் காந்தி, நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இந்த நாட்டின் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் தேர்வு முறையே மோசடியானதாக உள்ளது. வசதி படைத்தவர்கள், பணம் வைத்திருப்பவர்களால் இந்திய தேர்வு முறையையே விலைக்கு வாங்க முடியும் என்கிற நிலைமை உருவாகிவிட்டது. நீட் உள்ளிட்ட முதன்மையான தேர்வு முறைகளில் மோசடிகள் நிகழ்ந்துள்ளன. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தம்மைத் தவிர மற்றவர்களை குறைசொல்கிறார். தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று அவர் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஆவேசமாக பேசினார்.
பிரேமச்சந்திரன்: ஆர்எஸ்பி எம்பி பிரேமச்சந்திரன் பேசுகையில், நீட் முறைகேடுகாள் தேர்வு எழுதுகிற மாணவர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகி இருக்கிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் பதிவு செய்வது முதல் அனைத்து படிநிலைகளிலும் முறைகேடு நடைபெறுகிறது என்றார்.
திமுக கலாநிதி வீராசாமி: திமுக எம்பி கலாநிதி வீராசாமி பேசுகையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வால் அனிதா முதல் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆகையால் நீட் தேர்வு முறையையே மத்திய அரசு ரத்து செய்தாக வேண்டும் என்றார்.
காங்கிரஸ் மாணிக்கம் தாகூர்: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசுகையில், நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
சமாஜ்வாதி அகிலேஷ் யாதவ்: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மத்திய அமைச்சராக தர்மேந்திர பிரதான் நீடிக்கும் வரை போட்டி தேர்வுகளில் முறைகேடுகள் நடக்கத்தான் செய்யும். நீட் வினாத்தாள் விவகாரத்தில் மத்திய அரசு சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. ஒரே இடத்தில் 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிகழ்வும் நடந்துள்ளது. தர்மேந்திர பிரதான் அமைச்சராக இருக்கும் வரை மாணவர்களுக்கு நீதி கிடைக்காது என்றார்.
தர்மேந்திர பிரதான் பதில்: இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்திய தேர்வு முறை இன்னமும் தமது புனிதத் தன்மையை இழந்துவிடவில்லை. கடந்த 7 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் எந்த ஒரு வினாத்தாள் விற்பனையும் நடந்துவிடவில்லை. வினாத்தாள் கசிவுக்கும் இடம் தரப்படவில்லை. நீட் விவகாரம் என்பது தற்போது உச்சநீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ளது. 240-க்கும் மேற்பட்ட தேர்வுகள் எந்த முறைகேடும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எழுப்பும் முழக்கங்களால் பொய் எப்போதும் உண்மையாகிவிடவும் முடியாது. இந்திய தேர்வு முறை மோசடியானது என்ற ராகுல் காந்தியின் விமர்சனம் கடும் கண்டனத்துக்குரியது என்றார்.












Click it and Unblock the Notifications