பற்றி எரியும் பிரான்ஸ்... ஜூலை 14-ல் தேசிய தினம்- பிரதமர் மோடி, முப்படையின் 269 வீரர்கள் பங்கேற்பு!
டெல்லி: பிரான்ஸ் நாட்டில் வன்முறை, தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில் வரும் 14-ந் தேதி தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் நமது பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அத்துடன் நமது முப்படை வீரர்கள் 269 பேர் பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் பிரெஞ்சு வீரர்களுடன் இணைந்து அணிவகுப்பில் பங்கேற்க சென்றுள்ளனர்.
பிரான்ஸில் போதைப் பொருள் கடத்திய சிறுவன் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து பிரான்ஸில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. தீ வைப்பு, கொள்ளையடித்தல் சம்பவங்கள் தொடருகிறது. பிரான்ஸில் நிறவெறித் தாக்குதல் நிகழ்த்தப்படுவதாகவும் செய்திகள் பரப்பப்படுகின்றன. பிரான்ஸ் பற்றி எரிகிறது என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.

மோடியுடன் சந்திப்பு: இந்நிலையில் ஜூலை 14-ல் பிரான்ஸ் தேசிய தினம், பாஸ்டில் சிறை தகர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதனையொட்டி பிரான்ஸ் அதிபருக்கான ராஜ்ஜிய உறவுகள் ஆலோசகர் இமானுவேல் போனே இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்தார். பிரான்ஸ் நாட்டிற்கு பிரதமர் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் பல்வேறு இருதரப்பு ஒத்துழைப்பின் செயலாக்கம் குறித்து பிரதமருக்கு போனோ விளக்கினார்.ஜூலை 14 அன்று பேஸ்டில் தின கொண்டாட்டத்தில் கௌரவ விருந்தினராக பங்கேற்குமாறு தமக்கு அழைப்பு விடுத்துள்ள அதிபர் மேக்ரோனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்மையில் ஹிரோஷிமாவில் அதிபர் மேக்ரோனை தாம் சந்தித்து பேசியதை நினைவுகூர்ந்த பிரதமர், பிரான்சில் தங்களுடைய பேச்சை தொடர்ந்து மேற்கொள்ள தாம் எதிர்நோக்கியிருப்பதாகவும் இது இந்தியா-பிரான்ஸ் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

பிரான்ஸில் முப்படை வீரர்கள் குழு: 1789-ம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் போது பாஸ்டில் சிறை தகர்க்கப்பட்டதன் நினைவு தினம் ஜூலை 14 என்பதால் இது பாஸ்டில் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு, பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் நிலையில் அங்கு நடைபெறும் அணிவகுப்பில், இந்தியாவின் முப்படைகளைச் சேர்ந்த 269 வீரர்கள் பிரெஞ்சு வீரர்களுடன் இணைந்து பங்கேற்கவுள்ளனர். இந்த குழு இன்று பிரான்ஸ் சென்றுள்ளது.
இந்திய மற்றும் பிரெஞ்சு ராணுவங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு முதலாம் உலகப் போருக்கு முந்தையதாகும். 13 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வீரர்கள் இப்போரில் கலந்து கொண்டனர், அவர்களில் கிட்டத்தட்ட 74,000 பேர் சேற்று அகழிகளில் சிக்கி உயிரிழந்தனர். 67 ஆயிரம் பேர் காயமடைந்தனர். பின்னர் 2-ம் உலகப் போரில் 25 இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.

இந்தியா - பிரான்ஸ் இடையேயான ராணுவ உறவு இந்த ஆண்டு 25-வது ஆண்டைக் கொண்டாடுகிறது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
77 அணிவகுப்பு வீரர்கள் மற்றும் 38 இசைக்குழு உறுப்பினர்களைக் கொண்ட இந்திய ராணுவக் குழுவிற்கு கேப்டன் அமன் ஜக்தாப் தலைமை தாங்குகிறார். இந்திய கடற்படைக் குழுவிற்கு கமாண்டர் விராட் பாகெலும், இந்திய விமானப் படைக்கு ஸ்க்வாட்ரன் தலைவர் சிந்து ரெட்டியும் தலைமை தாங்குகின்றனர். இந்திய விமானப் படையின் ரஃபேல் போர் விமானங்களும் பங்கேற்கவுள்ளன.












Click it and Unblock the Notifications