நாடு முழுவதும் யோகா தின கொண்டாட்டம்.. யோகாசன பயிற்சியில் ஈடுபட்ட அமைச்சர்கள்.. முக்கிய தலைவர்கள்!
டெல்லி: சர்வதேச யோகா தினத்தையொட்டி, மத்திய அமைச்சர்கள், பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முன்மொழிவைத் தொடர்ந்து, டிசம்பர் 2014 இல் சர்வதேச யோகா தினமாக ஜூன் 21ஆம் தேதியை அங்கீகரித்தது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், யோகாவின் பல்வேறு அம்சங்களை முன்னிலைப்படுத்த வெவ்வேறு தீம் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 2023 ஆம் ஆண்டின் சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் 'வசுதைவ குடும்பகம்' (உலகம் ஒரே குடும்பம்' என்பதாகும்.
பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. சபை தலைமையகத்தில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார். யோகா பயிற்சியும் மேற்கொள்கிறார். இன்று இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் உரையாற்றினார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் தளத்தில் இந்திய கடற்படை வீரர்களுடன் இணைந்து யோகா செய்தார். இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், கடற்படை நலன் மற்றும் ஆரோக்கிய சங்கத்தின் தலைவர் கலா ஹரி குமார் மற்றும் இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் யோகாசனம் செய்தார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மும்பையில் யோகா பயிற்சி மேற்கொண்டார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசா மாநிலம் பாலசோரில் யோகா பயிற்சி மேற்கொண்டார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, நொய்டாவில் யோகாசன பயிற்சி மேற்கொண்டார். குருகிராமில் உள்ள தவ் தேவி லால் மைதானத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா யோகாசனம் செய்தார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டார்.












Click it and Unblock the Notifications