இந்து அமைப்பினர் ஊர்வலம்.. நூஹ் பகுதியில் இணைய சேவை முடக்கம்.. ஹரியானா பாஜக அரசு அதிரடி
டெல்லி: பிரஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்திரையை முன்னிட்டு ஹரியானாவின் நுஹ் மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஊர்வலத்தில் வன்முறை வெடித்ததால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள நுஹ் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் பிரஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்திரை நடைபெற்றது.

இந்த யாத்திரையின் திடீரென வன்முறை ஏற்பட்டது. இரு தரப்பினர் இடையே வெடித்த மோதலில் ஊர்க்காவல் படையை சேர்ந்த 2 பேர் கொல்லபட்டனர். 15 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் அங்குள்ள மத வழிபாட்டு தலத்திற்குள் புகுந்து இமாமையும் கும்பல் ஒன்று கொலை செய்தது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஆறு பேர் வரை பலியானதாக சொல்லபட்டது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. அப்போது ஆட்சியில் இருந்த பாஜகவின் மனோகர் லால் கட்டாருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பிரஜ் மண்டல் யாத்ரா நாளை நடைபெற உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக மெசேஜ் அனுப்புவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக நுஹ் மாவட்ட துணை ஆணையர் திரேந்திர கட்கடா கூறுகையில், யாத்திரை அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது அங்கு நிலமை அமைதியான முறையில் உள்ளது. இந்து முஸ்லீம் சமூகத்தினர் இடையே ஒற்றுமை நிலவுகிறது. இரு தரப்புமே யாத்திரையை வரவேற்க தயாராக உள்ளது. யாத்திரையை வரவேற்கும் விதமாக பல வெல்கம் கேட்ஸ் வைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். யாத்திரை செல்லும் பாதையில் டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications