நேஷனல் ஹெரால்டு வழக்கு.. 3 நாட்களில் 11 மணி நேரம்.. சோனியா காந்தியிடம் நடத்திய விசாரணை என்ன?
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் நாள் விசாரணை நிறைவடைந்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை. இதையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த சோனியா காந்தி, கடந்த 21-ந் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் முதல்முறையாக ஆஜரானார்.

28 கேள்விகள்
அன்று அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின் போது, சோனியா காந்தியிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் 28 கேள்விகளுக்கு பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் நேற்று இரண்டாவது முறையாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

6 மணி நேரம் விசாரணை
காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை, உணவு இடைவேளைக்கு பின் மாலை வரை தொடர்ந்தது. சுமார் 6 மணி நேரம் வரை நீடித்த இந்த விசாரணையில் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பாக சோனியா காந்திக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இன்று மீண்டும் ஆஜர்
இதனால் இந்த வழக்கில் 3வது முறையாக அமலாக்கத்துறை முன் சோனியா காந்தி இன்று ஆஜரானார். அவரிடம் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் ராகுல் காந்தி வழங்கிய பதில்களும், சோனியா காந்தியின் பதில்களும் ஒத்துப் போகின்றனவா என்று ஒப்பிட்டு பார்த்ததாக கூறப்படுகிறது.

விசாரணை நிறைவு
இந்த நிலையில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை மேற்கொண்ட 3ம் நாள் விசாரணை நிறைவடைந்துள்ளது. இதன்மூலம் மூன்று நாட்களில் மொத்தமாக 11 மணி நேரம் சோனியா காந்தியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் அளித்த பதில்கள் அடிப்படையில் மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications