ராகுல் காந்தி எம்பி பதவிக்கு ஆபத்தா? தகுதி நீக்கம் செய்யப்படுவாரா? சட்ட நிபுணர்கள் சொல்வது என்ன?
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்படும் ஆபத்து உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதபற்றி சட்ட நிபுணர்கள் கூறுகையில், தண்டனை அறிவிக்கப்பட்ட உடனே தகுதி நீக்க காலம் தொடங்குகிறது. ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம். மேல் நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைத்தால், தகுதி நீக்கமும் நிறுத்தப்படுகிறது என்றார்கள்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டார். 2019-ம் ஆண்டு, ஏப்ரல் 13-ந் தேதியன்று கர்நாடக மாநிலம், கோலாரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், "நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எப்படி எல்லா திருடர்களும் தங்கள் பெயருக்குப்பின்னே மோடியை பொதுவான பெயரையே வச்சிருக்காங்க" என்று கேள்வி எழுப்பினார். பிரதமர் நரேந்திர மோடியைக் குறிவைத்து ராகுல் காந்தி பேசிய இந்தப் பேச்சு, பெருத்த சர்ச்சையானது.

குஜராத்
இது தொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் மாநில முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி, குஜராத்தின் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தார். அவர் தனது மனுவில் ராகுல் காந்தி ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.

ராகுல் குற்றவாளி
இந்த வழக்கைப் பரிசீலித்த நீதிமன்றம், இதில் ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாகக் கூறி, விசாரணைக்கு ஏற்றது.
இந்த வழக்கை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.வர்மா விசாரித்தார். விசாரணைக்கு பின்னர் நேற்று தீர்ப்பை அவர் அறிவித்தார்.
நீதிபதி கூறுகையில், ராகுல் காந்தி மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 499 மற்றும் 500-ன் கீழான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது . ராகுல் காந்தி குற்றவாளி , அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது என்றார்.

மேல்முறையீடு
அதேநேரம் இந்த வழக்கில் ராகுல் காந்தி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வசதியாக நீதிபதி எச்.எச்.வர்மா தனது தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். அத்துடன் அவர் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழங்கினார். ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் மிகுந்த ஆவேசத்தில் உள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் புயல் கிளம்பும் என தெரிகிறது.

வயநாடு எம்பி
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்படும் ஆபத்து உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் ஒருவர் கிரிமினல் வழக்கில் 2 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு தண்டிக்கப்பட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறுகிறது. 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யாக உள்ளார். இந்த தண்டனையால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தப்பிக்கலாம்
இது தொடர்பான சட்ட நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்: அரசியல் சட்ட நிபுணர் ராகேஷ் திவிவேதி கூறுகையில்,
ராகுல் காந்தியின் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிறுத்தி வைத்து, தீர்ப்புக்கு தடை விதித்து, ஜாமீன் வழங்குகிறபோது தகுதி நீக்கம் செய்யப்படாது. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே 2013 மற்றும் 2018 வழங்கிய லில்லி தாமஸ் மற்றும் லோக் பிரகாரி வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள், தீர்ப்புக்கு தடை விதித்து, தண்டனையையும் நிறுத்தி வைத்தால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் பதவி பறிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்றார்.

பிடிடி ஆச்சாரி
மக்களவை முன்னாள் செயலாளரும் அரசியல் சட்ட நிபுணருமான பி.டி.டி. ஆச்சாரி கூறுகையில், தண்டனை அறிவிக்கப்பட்ட உடனே தகுதி நீக்க காலம் தொடங்குகிறது. ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம். மேல் நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைத்தால், தகுதி நீக்கமும் நிறுத்தப்படுகிறது என்றார்.

உடனே தடை பெறனும்
முன்னாள் தேர்தல் கமிஷன் முன்னாள் அதிகாரி ஒருவர் கூறுகையில், லில்லி தாமஸ் வழக்கின் தீர்ப்பு, 2 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலம் தண்டனை என்றால், பதவி தானாகவே போய்விடும் என்கிறது. பின்னர் லோக் பிரகாரி வழக்கின் தீர்ப்பு, மேல்முறையீட்டில் விசாரணை கோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டால், தகுதி நீக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டு விடும் என்கிறது. எனவே ராகுல் காந்தி, மேல்முறையீடு செய்து, அங்கு அவர்மீதான தீர்ப்புக்கு தடை பெற வேண்டும். தண்டனையை நிறுத்தி வைக்கச்செய்ய வேண்டும் அப்போது தான் அவரது பதவிக்கு ஆபத்து இருக்காது என்றார்.












Click it and Unblock the Notifications