‛‛சிதறிய கண்ணாடி’’.. ராகுல் காந்தி கார் மீது கல் வீசப்பட்டதா? உண்மை என்ன? காங்கிரஸ் பரபர விளக்கம்
டெல்லி: பாரத் ஜோடோ நியாய யாத்திரையின்போது ராகுல் காந்தியின் கார் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும் உண்மையில் நடந்தது என்ன? என்பது பற்றி காங்கிரஸ் கட்சி பரபரப்பான விளக்கத்தை தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை முடித்தார். இதையடுத்து 2வது கட்டமாக மணிப்பூரில் இருந்து மும்பை வரை பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்கியுள்ளார்.

மணிப்பூரில் இருந்து கடந்த 14ம் தேதி ராகுல் காந்தி யாத்திரையை தொடங்கிய நிலையில் 66 நாட்களில் மொத்தம் 6,713 கிலோமீட்டர் தொலைவை கடந்து மார்ச் மாதம் 20ம் தேதி மும்பையில் முடிவடைய உள்ளது. இந்த யாத்திரை என்பது வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் வகையில் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தான் யாத்திரையின் ராகுல் காந்தி பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறார். அசாமில் யாத்திரைக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுக்கப்பட்டதால் ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டார்.
இந்நிலையில் தான் மேற்கு வங்க மாநிலத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் பீகார் மாநிலத்துக்குள் ராகுல் காந்தியின் யாத்திரை நுழைந்தது. இதையடுத்து இன்று பீகார் கதிகார் மாவட்டத்தில் நடந்த யாத்திரை மீண்டும் மேற்கு வங்க மாநிலத்துக்குள் நுழைந்தது. மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தின் டெபிபூர், ரட்டா வழியாக யாத்திரை புறப்பட்டது.
இதற்கிடையே தான் யாத்திரையின்போது ராகுல் காந்தியின் கார் கண்ணாடி என்பது உடைந்து இருந்தது. அவரது யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கல்வீசியதில் இந்த கண்ணாடி உடைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‛‛பீகார் மாநிலம் கதிகாரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் யாத்திரை நுழைந்தபோது ராகுல் காந்தியின் கார் மீது கல் வீசப்பட்டது. இதில் கார் கண்ணாடி உடைந்த நிலையில் ராகுல் காந்தி காயமடையவில்லை'' என கூறினார்.
இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்நிலையில் தான் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கருத்தை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக மறுத்து வித்தியாசமான விளக்கத்தை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவின் தலைவராக சுப்ரியா ஷ்ரினேட் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த பதிவில் அவர், ‛‛ராகுல் காந்தியை பார்க்க ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். திடீரென பெண் ஒருவர் ராகுல் காந்தியின் காரின் குறுக்கே வந்தார். இதனால் உடனடியாக பிரேக் போடப்பட்டது.
இந்த வேளையில் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு வளையத்துக்கு பயன்படுத்தப்பட்ட கயிறு பட்டு கண்ணாடி உடைந்தது. மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும், நீதிக்காகவும் ராகுல் காந்தி போராடி வருகிறார். பொதுமக்கள் அவருடன் உள்ளனர். பொதுமக்கள் அவரை பாதுகாப்பாக வைத்துள்ளனர்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications